

தெலங்கானாவில், மோந்தா புயலின் தாக்கத்தால் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் ஆந்திரத்தின் காக்கிநாடா அருகில் நேற்று (அக். 28) இரவு கரையைக் கடந்தது. இந்தப் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் நேற்று அதிகப்படியான கனமழை பெய்தது பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மோந்தா புயலின் தாக்கத்தால் தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. தெலங்கானாவில், ஹைதராபாத் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், தெலங்கானாவின் மஹபூபாபாத், வாரங்கல் மற்றும் ஹனுமகொண்டா ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணி முதல் கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இத்துடன், அடிலாபாத், மஞ்சேரில், நிர்மல், ஜக்தியால், ராஜண்ணா சிர்சில்லா, கரீம்நகர், பெத்தபள்ளி, ஜெயசங்கர் பூபாலபள்ளி, சூர்யாபேட்டை, ஜங்கான், சித்திப்பேட்டை மற்றும் யாதாத்ரி புவனகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிகாரில் பஞ்ச பாண்டவர் கூட்டணி: அமித் ஷா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.