

பெங்களூரில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவரை கார் ஏற்றிக் கொலை செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
சாலையில் உணவு டெலிவரி ஊழியரை கார் ஏற்றிக் கொல்லும் காட்சியும், பிறகு அதே வழியில் நிதானமாக வந்து, காரின் உடைந்த பாகங்களை எடுத்துச் செல்லும் விடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியிருக்கிறது.
கைது செய்யப்பட்டிருப்பவர்கள், கேரளத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் (32), கலைப் பயிற்சியாளர் என்றும், அவரது மனைவி ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த ஆரத்தி ஷர்மா (30) என்பதும் இவர்கள் அக். 25ஆம் தேதி 24 வயது தர்ஷனைக் கொலை செய்தக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சாலையில் நடந்த சிறு வாக்குவாதம் முற்றியதில், இந்த கொலை நடந்திருப்பதாகவும், சம்பவத்தன்று இரவு 9 மணிக்கு தர்ஷன் இருசக்கர வாகனம், மனோஜ் காரை உரசிவிட்டதாகவும், இதில், கார் கண்ணாடி சற்று சேதமடைந்திருக்கிறது. தர்ஷன் மன்னிப்புக் கேட்டுவிட்டு உணவு டெலிவரி செய்ய சென்றிருக்கிறார். ஆனால் ஆத்திரம் குறையாத மனோஜ், வேகமாகச் சென்று இரு சக்கர வாகனத்தை இடித்துத் தள்ளியிருக்கிறார். இதில் தர்ஷன் பலியாக, இருசக்கர வாகனத்தில் பின்னல் அமர்ந்திருந்தவர் படுகாயமடைந்துள்ளார்.
முதலில் இதனை விபத்து என்று நினைத்த காவல்துறையினருக்கு, சிசிடிவி காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் 9 மணிக்கு நடந்த நிலையில், அதே இடத்துக்கு 9.40 மணிக்கு மீண்டும் அவர்கள் முகக் கவசம் அணிந்துகொண்டு நடந்து வந்துள்ளனர். அருகில் காரை நிறுத்திவிட்டு, அவர்கள் நடந்து வந்து, காரின் உடைந்த பாகங்களை எடுத்துச் சென்றபோது, அவர்களது உருவம் தெளிவாகப் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.