தெரியவில்லை.. வந்தால் பதில் சொல்கிறேன்: ஓபிஎஸ், செங்கோட்டையன் வருகை குறித்து இபிஎஸ்!

தெரியவில்லை, வந்தால் நான் பதில் சொல்கிறேன் என்று ஓபிஎஸ், செங்கோட்டையன் வருகை குறித்து இபிஎஸ் பதில்.
தேவர் நினைவிடத்தில் மரியாதை
தேவர் நினைவிடத்தில் மரியாதை
Published on
Updated on
1 min read

பசும்பொன்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்கு ஓ. பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் ஒரே காரில் வந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய போது, தெரியவில்லை… வந்தால்தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் இருவரும் ஒரே காரில் ராமநாதபுரம் வந்திருப்பதாகவும், அவர்கள் டிடிவி தினகரனுக்காக வழியில் காத்திருப்பதாகவும் காலை முதல் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, இன்றைய தினம் 118-வது தேவர் ஜெயந்தி விழாவை விழாவை முன்னிட்டு அதிமுக சார்பாக நானும் எங்கள் மூத்த தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவர் ஐயாவின் நினைவிடத்தில் மலர் தூவி புகழஞ்சலி செலுத்தி உள்ளோம்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தேவர் பெருமகனார் ஜெயந்தி விழாவை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் தெய்வத் திருமகனார் தேவர் அவர்கள். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், தேவர் ஐயாவுக்கு புகழ் சேர்க்கும் விதமாக சட்டப்பேரவை வளாகத்தில் முழு உருவப்படத்தை திறந்து வைத்தார்.

புரட்சித் தலைவி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சுமார் 13 கிலோ தங்கத்தில் தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு தங்கக் கவசம் சாத்தினார். ஜெயலலிதா, தேவருக்கு நந்தனத்தில் முழு உருவச் சிலையை நிறுவினார்.

அவர் வாழ்ந்த காலத்தில் தனக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கும், பட்டியலின மக்களுக்கும் பிரித்துக் கொடுத்து ஏழைகளை வாழவைத்த கொடை வள்ளலாக திகழ்ந்தவர். அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அதிமுக சார்பாக அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்.

அவர் தேசிய தலைவராக விளங்கியவர், மக்களுக்காக பாடுபட்டவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். தேசத்துகாக பாடுபட்ட அவருக்கு அனைவரும் சேர்ந்து புகழ் சேர்ப்பது பெருமைக்குரியது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதையடுத்து பழனிசாமியிடம், ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகிய இருவரும் ஒரே காரில் வருவதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தெரியவில்லை… வந்தால்தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன்” என்றார்.

Summary

OPS said I don't know, I will answer if I come, EPS replied regarding Sengottaiyan's visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com