

தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பஞ்சாப் அரசு 7 நட்சத்திர சொகுசு மாளிகை ஒதுக்கியுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பஞ்சாபின் சண்டீகரில் தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு 7 நட்சத்திர சொகுசு மாளிகை ஒதுக்கியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தில்லியில் 'ஷீஷ் மஹால்' தொடர்பான சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளது.
பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் முதல்வரான பகவந்த்மான் சிங், அரவிந்த் கேஜரிவாலுக்கு 7 நட்சத்திர மாளிகையை ஒதுக்கியுள்ளார் என்ற தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்ற குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மறுத்துள்ளது.
சண்டீகர் செக்டார் 2-ல் மாளிகைக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள தில்லி பாஜகவினர், அதற்கான வான்வெளி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தில்லி பாஜக வெளியிட்டுள்ள பதிவில், “சாமானிய மனிதரைப் போல் நடித்த அரவிந்த் கேஜரிவால், இன்னொரு பிரமாண்டமான ஷீஷ் மஹாலைக் கட்டியுள்ளார்.
தில்லியில் அவரது மாளிகையை காலி செய்தவுடன் பஞ்சாபின் சூப்பர் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிரமாண்டமான மாளிகையைக் கட்டியுள்ளார்” எனப் பதிவிட்டுள்ளனர். மேலும், பஞ்சாப் போதைப்பொருள், வேலையின்மை மற்றும் ஊழலில் சிக்கித் தவிக்கும் போது, மாநில அரசு கேஜரிவாலின் தனிப்பட்ட சேவை குழுவாக செயல்பட்டு வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
முன்னதாக, 2015 முதல் ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்தாண்டு செப்டம்பர் முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை “ஷீஷ் மஹால்” என்று பாஜகவால் முத்திரை குத்தப்பட்ட சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவில் கேஜரிவால் வசித்து வந்தார்.
தில்லியின் முதல்வராக இருந்தபோது அரவிந்த் கேஜரிவால் வாழ்ந்து வந்த வீட்டைப் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தியதாகவும், அதிக விலையுயர்ந்த ஆடம்பர பொருள்கள் பயன்படுத்தியதாகவும் பாஜக குற்றம்சாட்டியிருந்தது.
இந்த நிலையில், மீண்டும் ஒரு பிரமாண்ட மாளிகையைக் கட்டியுள்ளதாக ஆம் ஆத்மி மீது பாஜக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.