

ஹரியாணாவின் பல்கலைக் கழகத்தில் 3 பெண் தூய்மைப் பணியாளர்களின் மாதவிடாயை நிரூபிக்கக் கோரி வற்புறுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியாணாவின் ரோஹ்தக்கில் உள்ள பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வரும் 3 பெண் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் மாதவிடாய் காலத்தில் பணியில் விடுப்பு எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் பணிக்குச் சென்றபோது, அவர்கள் மாதவிடாய்க்காத்தான் விடுப்பு எடுத்தனர் என்பதை அவர்களின் மேற்பார்வையாளர்கள் வினோத் மற்றும் ஜிதேந்திரா ஆகிய இருவரும் நம்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த 3 பெண்களையும் துணியைக் கழற்றி, மாதவிடாயை நிரூபிக்குமாறு மேற்பார்வையாளர்கள் இருவரும் வற்புறுத்தியுள்ளனர். இருப்பினும், பெண்கள் மூவரும் மறுத்த நிலையில், தங்கள் உயர் அதிகாரியின் உத்தரவால்தான் இப்படி நடந்து கொள்வதாகவும், இல்லையெனில் பணிநீக்கம் செய்துவிடுவோம் என்று பெண் தூய்மைப் பணியாளர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களுடன் வேறொரு பெண் ஊழியரையும் அனுப்பி, மாதவிடாய்க்கான ஆதாரமாக போட்டோவும் எடுத்துவருமாறு கட்டளையிட்டுள்ளனர். இதனால், வேறு வழியின்றி அவர்களும் அவ்வாறே செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்தவுடன், பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் மற்ற பெண் ஊழியர்களும் மாணவர் அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். மாநில மகளிர் ஆணையத்திடமும் புகார் அளித்தனர். இந்த நிலையில், சம்பவத்துக்குக் காரணமான மேற்பார்வையாளர்களில் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக, பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் அல்லது பெண்களுக்கு எதிரான அவமதிப்புக் குற்றம், குற்றவியல் மிரட்டல் ஆகிய பிஎன்எஸ் விதிகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், எஸ்சி/எஸ்டி சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பெண்களுக்கு எதிரான கொலைகார காங்கிரஸ்: பாஜக விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.