

ஆண் நண்பர்களுடன் பழகுவதைத் தட்டிக் கேட்ட தாயை, நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற மகளே கொலை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
தெற்கு பெங்களூரில் உத்தரஹள்ளி என்ற பகுதியில், நண்பர்களுடன் சேர்ந்து தாயைக் கொன்று, அவரது புடவையால் தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை நாடகமாடிய சிறுமி உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் நேத்ராவதி (34) என்பதும், கடன் வசூலிப்பு நிறுவனத்தில் டெலிகாலராக பணியாற்றி வந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து பிரிந்து மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், சொந்த மகளால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
17 வயது மகள், தாயைக் கொன்றுவிட்டு, வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். முதலில், இது தற்கொலை என்றே கருதியிருக்கிறார்கள். அப்போதுதான், நேத்ராவதியின் மகள், பாட்டி வீட்டுக்குத் திரும்பி வந்து கற்பனையாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். இதனால், அவரது சித்திக்கு சந்தேகம் வந்து, அவர் காவல்நிலையத்தில் தெரிவித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, சிறுமி உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து காவல்துறை கூறுகையில், ஒரு சிறுமி மற்றும் அவரது 4 ஆண் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 16 முதல் 17 வயது இருக்கும். அனைவரும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள். ஒரு சிறுவன் மட்டும் 7ஆம் வகுப்பு படித்து வருவதும், 13 வயது என்றும் தெரிய வந்துள்ளதாகக் கூறியிருக்கிறது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை ஏன்?
கொலை செய்த சிறுமி, 10வதில் தோல்வி அடைந்து வீட்டில் இருந்திருக்கிறார். இவர் 9ஆம் வகுப்பு படித்து பாதியில் படிப்பை நிறுத்திய சிறுவனை காதலித்துள்ளார். அந்த சிறுவனும் சிறுவனின் நண்பர்களும், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
இது பற்றி தெரிந்ததும், மகளையும், அவரது ஆண் நண்பர்களையும் நேத்ராவதி கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகளும் அவரது ஆண் நண்பர்களும், அக்.25ஆம் தேதி நேத்ராவதி உறங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை நெறித்துக் கொலை செய்திருக்கிறார்கள். பிறகு, வீட்டிலிருந்து மின் விசிறியில் புடவையால் தொங்கவிட்டு, தற்கொலை போல சித்தரித்திருக்கிறார்கள்.
பிறகு, மகளும் நண்பர்களும் வீட்டை வெளியே பூட்டிவிட்டு தப்பியோடியிருக்கிறார்கள். நேத்ராவதியை அவரது சகோதரி தேடி வீட்டுக்கு வந்த போது, அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
சம்பவம் நடந்து 3 நாள்களுக்குப் பிறகு, நேத்ராவதியின் தாய் வீட்டுக்குச் சென்ற பேத்தியின் நடத்தையில் சந்தேகம் வந்ததால், அவர்கள் காவல்நிலையம் சென்றபோதுதான் உண்மை தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.