
சீனா, ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 1) மாலை தில்லி திரும்பினார்.
இந்தியாவில் இருந்து ஆக. 29ஆம் தேதி ஜப்பான் புறப்பட்ட பிரதமர் மோடி, 4 நாள்கள் பயணங்களை முடித்துக்கொண்டு செப். 1 ஆம் தேதி மாலை தில்லி திரும்பினார்.
இந்தப் பயணத்தில் சீனாவின் தியான்ஜின் நகரில் ஆக. 31 முதல் செப். 1 வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச அளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
சீன பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய பிறகு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
''சீனாவில் ஆக்கப்பூர்வமான பயணம் நிறைவு பெற்றது. இங்கு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினேன். உலகளாவிய முக்கிய பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன். இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் சீன அரசுக்கும் மற்றும் மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இப்பயணத்தில் சீனா, ரஷியா அதிபர்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், தெற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் யுரேசியா நாடுகளைச் சேர்ந்த தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். மாலத்தீவுகள், நேபாளம், லாவோஸ், வியட்நாம், ஆர்மீனியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி அவர்களிடம் எடுத்துரைத்தார்.
இதையும் படிக்க | டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.