
கம்பிவட இணைப்பற்ற 5 ஜி சேவைகளை அதிக பயனர்களுக்கு வழங்கும் நிறுவனம் குறித்த தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜியோ நிறுவனம் அதிக 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாகவும், இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல் போன்றவை உள்ளன. தற்போது, கம்பி இணைப்பற்ற 5 ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் அதிக பயனர்களைக் கொண்டு ஜியோ முன்னிலை வகித்து வருகிறது.
2025 ஜூலை நிலவரப்படி, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், ஜி யோ நிறுவனம் கம்பிவடமற்ற 5 ஜி இணைப்பில் 3,37,789 பயனர்களைக் கொண்டுள்ளது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனம் 2,11,072 கம்பிவடமற்ற 5 ஜி பயனர்களைக் கொண்டுள்ளது.
எனினும் மாதாந்திர பயனர்களின் விகிதத்தில் ஜூலை நிலவரப்படி ஏர்டெல் நிறுவனம் 12.12% பயனர்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் 5.53% பயனர்களை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. பெரும்பாலான பயனர்கள் ஏர்டெல் சேவையை விரும்புவதை இந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
எனினும், ஒட்டுமொத்தமாக இதுவரை 64.45 லட்சம் 5 ஜி பயனர்களை ஜியோ நிறுவனம் கொண்டுள்ளது. ஆனால், ஏர்டெல் நிறுவனம் 19.53 லட்ச பயனர்களை மட்டுமே கொண்டுள்ளது. (ஜூலை 2025 நிலவரம்)
தொலைத்தொடர்பு சேவையில் இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும், பிரீமியம் 5 ஜி பயனார்கள் கொண்ட சந்தையை ஆக்கிரமிப்பதையே இரு நிறுவனங்களும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ நிறுவனம் 50.62% சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளது. இதேகாலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 31.18% பங்குகளை மட்டுமே கொண்டுள்ளது. எஞ்சிய 18% பங்குகள் பிஎஸ்என்எல், வோடாஃபோன் - ஐடியா போன்ற மற்ற நிறுவனங்கள் கொண்டுள்ளன.
இதையும் படிக்க | இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.