
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவமரியாதையாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு பிகார் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியின்போது, தலைவர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வராத நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மைக்கில், பிரதமர் மோடியின் தாயைப் பற்றி கருத்துக் கூறியிருந்தது பலரால் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தின்போது, தனது தாயை அவமதித்து விட்டதாகவும், 'இந்தியத் தாயை' அவமதிப்பவர்களுக்கு என் தாயை வசைபாடுவது ஒரு பொருட்டே அல்ல எனவும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விடியோ பதிவிட்டுள்ள ஸ்மிருதி இரானி,
''பிகாரில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து எதிர்க்கட்சியினர் அவமதித்து பேசிய செயல், நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தாயாருக்கும் அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கடும் வறுமைக்கு மத்தியில் தனது குடும்பத்துக்காக வாழ்நாள் முழுவதையும் கழித்தவர். அவர், தற்போது நம்மிடையே இல்லை. அத்தகைய தாயை அவமதிப்பது நம் அனைவருக்கும் வேதனை அளிக்கிறது.
நாடு முழுவதும் பிகாரிலும் உள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.