பிகார் பேரணியில் பைக்கை பறிகொடுத்த இளைஞர்.! புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல்!

பிகார் பேரணியில் இளைஞர் ஒருவர் பைக்கை இழந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி புதிய பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளதைப் பற்றி...
புதிய பைக்குடன் சுபம் மற்றும் வாக்குரிமைப் பேரணியில் ராகுல்.
புதிய பைக்குடன் சுபம் மற்றும் வாக்குரிமைப் பேரணியில் ராகுல்.
Published on
Updated on
2 min read

பிகாரில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியில் பங்கேற்ற இளைஞர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை பாதுகாப்பு படையினரிடம் பறிகொடுத்த நிலையில் அவருக்கு புதிய பைக் ஒன்றை பரிசளித்துள்ளார் ராகுல் காந்தி எம்.பி.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, பிகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 17 அன்று ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரமில் இருந்து காங்கிரஸின் வாக்குரிமைப் பேரணியை தொடங்கினார்.

மொத்தமாக 1300 கி.மீ. 14 நாள்கள் கொண்ட இந்தப் பேரணி பிகார் தலைநகர் பாட்னாவில் செப்டம்பர் 1 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் கயாஜி, நவாடா, ஷேக்புரா, லக்கிசராய், முங்கர், கதிஹார், தர்பங்கா, மதுபானி, சீதாமர்ஹி, முசாபர்பூர், பூர்னியா, மேற்கு சம்பாரண், கோபால்கஞ்ச், கிழக்கு சம்பாரண், சிவான், போஜ்பூர் மற்றும் பாட்னா வழியாக பேரணியில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தர்பங்கா மாவட்டத்தில் ராகுல் காந்தி பேரணி சென்றபோது, அங்கு கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் கூடியது.

அப்போது அங்கு இருந்த தாபா(ஹோட்டல்) அருகில் பாதுகாப்பு ஏற்படுத்த பாதுகாப்பு பணியாளர்கள், கூடியிருந்தவர்களின் பைக்குகளை வாங்கியுள்ளனர். அதில், தாபா உரிமையாளரான சுபத்தின் ரூ.1.67 லட்சம் மதிப்புமிக்க பல்சர் 220 பைக்கும் (வண்டி எண்: BR 07 AL 5606) மாயமானது.

இதுகுறித்து சுபம் கூறுகையில், “பாதுகாப்புப் பணியாளர்கள் முதலில் தாபாவுக்கு வந்து தேநீர் கேட்டனர். ஆனால், சிறிது நேரம் கழித்து பாதுகாப்புக்காக பைக் வேண்டும் எனக் கேட்டனர். பேரணி 1.5 கி.மீ. தொலைவுக்கு இருக்கும். பின்னர், உங்களது பைக்கை திருப்பி தந்துவிடுவோம் எனத் தெரிவித்தனர்.

அவர்கள் என்னை பைக்கில் அழைத்துச் சென்றனர். ஒரு ஸ்கார்பியோ காரில் உட்கார வைத்திருந்தனர். ஆனால், பேரணி முடிந்ததும் அவர்களையும், என்னுடைய பைக்கையும் எங்கு தேடியும் காணவில்லை” என்றார்.

பெரிய அளவில் இல்லையென்றாலும் ஆறு பைக்குகள் திரும்பக் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனால், சுபத்தின் பைக் மட்டும் கிடைக்கவில்லை.

அவர் தன்னுடைய காரில் மோத்திஹரி, சீதாமர்ஹி மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய பகுதிகளில் சென்று தேடியும் தன்னுடைய பைக் கிடைக்கவில்லை. இதற்காக அவர் ரூ.15,000 முதல் ரூ.16,000 வரை செலவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியான நிலையில், ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில், பைக்கை பறிகொடுத்த சுபத்துக்கு காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அழைப்பு விடுத்தார்.

மன உளைச்சலில் இருந்த சுபத்துக்கு வாக்குரிமைப் பேரணியின் நிறைவு நாளான செப்டம்பர் 1 ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் புதிய பல்சர் 220 பைக்கையும், அதற்கான சாவியையும் ஒப்படைத்தார்.

பைக் இழந்தவருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய பைக் வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Summary

Rahul Gandhi gifts new bike to Darbhanga youth; replaces vehicle lost during 'Voter Adhikar Yatra'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com