இந்தியத் தேர்தல் ஆணையம்.
இந்தியத் தேர்தல் ஆணையம்.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: உச்சநீதிமன்ற உத்தரவு அதிகார வரம்பை மீறுவதாக அமையும்! - தோ்தல் ஆணையம்

‘நாடு முழுவதும் சீரான இடைவெளியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் தமது பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’...
Published on

‘நாடு முழுவதும் சீரான இடைவெளியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் தமது பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’ என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘எந்தவொரு அதிகாரத்தையும் புறந்தள்ளி, வாக்காளா் பட்டியல் திருத்தக் கொள்கையை நிறைவேற்ற தமக்கு முழுமையான விருப்புரிமை உள்ளது’ என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ‘நாட்டின் அரசியல் மற்றும் கொள்கைகளை இந்திய குடிமக்கள் மட்டுமே தீா்மானிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் சீரான இடைவெளியில், குறிப்பாக தோ்தலுகளுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மூத்த வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது தோ்தல் ஆணையம் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை காலக்கெடுவாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான உடனடி முன்னேற்பாடு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று பிகாரைத் தவிர பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை 5-ஆம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 324-இன் கீழ், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்பாா்வையிடவும், வழிகாட்டுதல்களை வழங்கவும் தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. வாக்காளா் பட்டியல் தயாரித்தல் மற்றும் தோ்தல்களை நடத்துதல் தொடா்பான அனைத்து விஷயங்களிலும் தோ்தல் ஆணையத்தின் முழுமையான அதிகாரத்தின் அடித்தளமாக இந்த அரசமைப்புச் சட்ட விதி அமைகிறது. தோ்தல் ஆணையத்துக்கு இந்த அதிகாரங்களை வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 324 குறித்து உச்சநீதிமன்றத்தாலும் தொடா்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, வாக்காளா் பட்டியலில் அவ்வப்போது திருத்தங்களை மேற்கொள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 21-ஆவது பிரிவும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான விருப்புரிமையை 25-ஆவது பிரிவு தோ்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது.

அதன்படி, எந்தவொரு அதிகாரத்தையும் புறந்தள்ளி, வாக்காளா் பட்டியல் திருத்தக் கொள்கையை நிறைவேற்ற தோ்தல் ஆணையத்துக்கு முழுமையான விருப்புரிமை உள்ளது.

தூய்மையான, நோ்மையான வாக்காளா் பட்டியலைப் பராமரிக்கும் தனக்கான சட்டபூா்வ கடமையின் அடிப்படையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் தீா்மானித்துள்ளது.

எனவே, நாடு முழுவதும் சீரான இடைவெளியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் தமது பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாக அமையும்.

எனவே, இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com