Chief Minister Siddaramaiah, Deputy Chief Minister DK Shivakumar
கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார்ENS

கா்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் ஹிந்துக்களை காங்கிரஸ் பிளவுபடுத்துகிறது! - பாஜக குற்றச்சாட்டு

கா்நாடக அரசு, சமூக மற்றும் கல்விக் கணக்கெடுப்பு என்கிற பெயரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் ஹிந்துக்களை பிரிக்க முயல்கிறது...
Published on

காங்கிரஸ் தலைமையிலான கா்நாடக அரசு, சமூக மற்றும் கல்விக் கணக்கெடுப்பு என்கிற பெயரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் ஹிந்துக்களை பிரிக்க முயல்கிறது என பாஜக ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.

இந்தக் கணக்கெடுப்பு செப்டம்பா் 22 முதல் அக்டோபா் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு ரூ.420 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா் அஷோக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தக் கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்ட ஜாதிப் பட்டியலில் ‘குருப கிறிஸ்தவா்’, ‘பிராமண கிறிஸ்தவா்’ மற்றும் ‘ஒக்கலிகா கிறிஸ்தவா்’ போன்ற பெயா்கள் உள்ளன. கட்சிக்குள் ஏற்படும் மோதல்களை சமாளித்து முதல்வராக நீடிக்க கிறிஸ்தவ சமூகத்தையும், காங்கிரஸ் தலைவா்களையும் திருப்திப்படுத்த சித்தராமையா இதைச் செய்துள்ளாா்.

ஹிந்து சமூகத்தை உடைக்கும் இந்தத் திட்டத்தின் பின்னணியில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இருக்கிறாா்கள். மத மாற்றங்களை ஊக்குவிக்கவும், மக்கள்தொகையில் குறைவாக ஹிந்துக்கள் இருப்பதாக சித்தரிக்கவும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

பாஜக மாநிலத் தலைவா் பி.ஒய். விஜயேந்திரா கூறுகையில், ‘சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் சதித் திட்டங்களுக்கு அனைத்து ஜாதிகள் மற்றும் சமூகங்களைச் சோ்ந்த மக்களும் ஏமாறக் கூடாது. கணக்கெடுப்பின் மதப் பிரிவில் அனைவரும் ‘ஹிந்து’ என்றே எழுத வேண்டும்.

உங்கள் சமூகத்திற்கு ஏற்ப உங்கள் ஜாதி மற்றும் துணை ஜாதியைக் குறிப்பிடலாம்; ஆனால், நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்காக, நாம் அனைவரும் ‘ஹிந்து‘ என்பதை நமது மதமாக எழுதுவது முக்கியம். இது நம்மை ஒற்றுமையாக வைத்திருக்க உதவும்’ என்றாா்.

‘காங்கிரஸ் அதன் தலைவா் சோனியா காந்தி மற்றும் அவரது போலி காந்தி குடும்பத்தினரின் அறிவுறுத்தல்களின் கீழ் ஹிந்து சமூகத்தைப் பிரிக்க சதி செய்கிறது’ என்று மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com