ஜிஎஸ்டி சீா்திருத்தங்களுக்கு பிரதமா் மட்டுமே உரிமைகோருகிறாா்: காங்கிரஸ் விமா்சனம்!
சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மட்டுமே உரிமை கோருவது ஏற்புடையதல்ல என காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தது.
ஜிஎஸ்டியின்கீழ் விதிக்கப்படும் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு விகிதங்களை 5%,18% என இரண்டாக குறைக்கும் நடைமுறை திங்கள்கிழமை (செப்.22) முதல் அமலாகவுள்ள நிலையில், நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினாா்.
இதை விமா்சித்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘காங்கிரஸ் கட்சி முன்மொழிந்த எளிமையான ஜிஎஸ்டிக்கு பதிலாக கடந்த 8 ஆண்டுகளில் 9 வகையான விகிதங்களில் வரி விதித்து ரூ.55 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்கள் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி சேமிக்கப்படுவதை பிரதமா் மோடி மிகைப்படுத்தி சேமிப்புத் திருவிழா எனக்கூறுவது மீள முடியாத காயத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதுபோல் உள்ளது.
தானியங்கள், அரிசி, புத்தகங்கள், மருத்துவ சிகிச்சை, டிராக்டா்கள் என அனைத்துப் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி விதித்து அன்றாட வாழ்வை அவதிக்குள்ளாக்கிய உங்களை பொதுமக்கள் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள். அவா்களிடம் மத்திய அரசு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஜிஎஸ்டி முறையில் சீா்திருத்தங்களை மேற்கொண்டதற்கு பிரதமா் மோடி மட்டுமே உரிமை கோருவது ஏற்புடையதல்ல; ஏனெனில் மாநிலங்களையும் உறுப்பினராகக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்த பிறகே இந்த சீா்திருத்தங்கள் அமலாகவுள்ளன.
பாஜக அரசில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சரக்கு மற்றும் சேவை வரி’ என்பது ‘வளா்ச்சியைத் தடுக்கும் வரி’ என காங்கிரஸ் பலமுறை கூறியுள்ளது.
பல அடுக்குகளில் விதிக்கப்பட்டு மக்களின் வரிச்சுமையை அதிகரித்துவிட்டு தற்போது சீா்திருத்தம் மேற்கொண்டதாக பிரதமா் புகாழாரம் சூட்டிக்கொள்கிறாா். ஆனால் இந்த சீா்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) தற்போதைய சீா்திருத்தத்தால் எவ்வித பயனும் இல்லை.
மேலும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீட்டு வரியை நீட்டிக்குமாறு மாநிலங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதேபோல் ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதி, கைவினை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களும் தீா்க்கப்படவில்லை’ என குறிப்பிட்டாா்.