
மும்பையில் கடற்கரை சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மகாராஷ்டிர மாநிலம், தெற்கு மும்பையில் உள்ள கொலாபாவுக்கு அதிஷ் ஷா(52) லம்போர்கினி காரில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். மும்பையின் கடற்கரை சாலையில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி, தடுப்பு சுவரின் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் அவர் காயமின்றி தப்பினார். விபத்தில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. நகரில் மழை பெய்ததால், ஈரமான சாலை விபத்துக்கு வழிவகுத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும காரில் இயந்திரக் கோளாறு ஏதேனும் உள்ளதா எனவும் ஆய்வு செய்யுமாறு ஆர்டிஓ-விடம் போலீஸார் கேட்டுக்கொண்டனர்.
சேதமடைந்த கார் பின்னர் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது என்று அதிகாரி ஒருவர் கூறினார். அதிஷ் ஷா மீது அவசரமாக வாகனம் ஓட்டியதற்காக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் அதிஷ் ஷா நேபியன் கடல் சாலையில் வசிப்பவர்.
ரேமண்ட் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கௌதம் சிங்கானியா தனது எக்ஸ் தளத்தில், மற்றொரு நாள், மற்றொரு லம்போர்கினி விபத்து. இந்த முறை மும்பையின் கடற்கரை சாலையில். இந்த கார்களுக்கு இழுவை சக்தி இருக்கிறதா? தீப்பிடிப்பதில் இருந்து பிடியை இழப்பது வரை லம்போர்கினியில் என்ன நடக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.