
கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவுமுதல் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால், மின்சாரம் பாய்ந்து இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.
வரலாறு காணாத மழையால், நேற்றிரவு மூன்று மணிநேரத்தில் மட்டும் 185 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அலிப்பூர் பகுதியில் அதிகபட்சமாக 247 மிமீ மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கொல்கத்தாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் 250 மி.மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளதால், சாலைகளில் வெள்ள நீர் சூழந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, மெட்ரோ, ரயில் நிலையங்களிலும் நீர் தேங்கியுள்ளதால் அந்த சேவைகளும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால், துர்கா பூஜையை முன்னிட்டு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் உள்பட பெரும்பாலான ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் வீடுகளின் தரைத் தளங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்ட பந்தல்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் ஏற்பாட்டாளர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
கொல்கத்தா மாநகரின் வெவ்வேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
இதனிடையே, வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும், செப். 5 ஆம் தேதி உருவாகவுள்ள மற்றொரு புயல் சின்னத்தால் மழை தொடர வாய்ப்புள்ளதகாவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.