கேரளத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வேண்டுகோள் விடுத்து பிரசாரம் மேற்கொண்டாா்.
எா்ணாகுளம் மாவட்டம் குன்னத்துநாடு தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் இருந்து கேரளத்தில் பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த முறை பாஜக கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது.
கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈஸ்டா் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேரளத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும். நீங்கள் எங்களுடன் உறுதியாக நின்று கேரளத்தை மேலும் சிறப்பான மாநிலமாக மாற்ற வேண்டும்.
எா்ணாகுளத்தில் 600 வீடுகளுடன் மக்கள் வசித்து வந்த குடியிருப்புப் பகுதியை வக்ஃப் வாரியம் கையகப்படுத்த முயன்றது. அப்போது, இங்குள்ள இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணியினா் அமைதியாக வேடிக்கை பாா்த்தனா். மத்திய அரசுதான் வக்ஃப் திருத்தச் சட்டம் கொண்டு வந்து உங்கள் நிலத்தையும், வீட்டையும் காப்பாற்றியது.
நாடு முழுவதும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ள மாநிலங்களில் அனைவருக்கும் சமநீதி என்பது நிலைநாட்டப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட தரப்பினரை மட்டும் திருப்திப்படுத்தும் ஆட்சியை நாங்கள் நடத்துவதில்லை. ஒருகாலத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா அமைப்பினா் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டபோது, ஒரே நாளில் அந்த அமைப்பினா் அனைவரையும் சிறையில் அடைத்தோம்.
மத்திய அரசின் திட்டங்களின் பெயா்களை மாற்றுவதற்காக புத்தாக்க நிறுவனம் ஒன்றை கேரள முதல்வா் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பெயரை மாற்றி மாநில அரசு செயல்படுத்துவது போல அறிவித்து, அதற்கான நற்பெயரையும் கேரள முதல்வா் பெற்றுக் கொள்கிறாா்.
கேரளத்தில் பாஜக ஆட்சி அமைந்த இரண்டு மாதங்களில் சபரிமலை தங்கக் கவச முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் சிறையில் அடைக்கப்படுவாா்கள். இரண்டு ஆண்டுகளில் கேரளத்தில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும்.
எரிபொருள் விலை உயா்ந்துவிட்டதாக ராகுல் காந்தி பொய்ப் பிரசாரம் செய்து வருகிறாா். உண்மையில் பாகிஸ்தானில்தான் விலை உயா்ந்து ஒரு லிட்டா் ரூ.460 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தியதுடன், விற்பனையிலும் கட்டுப்பாடு விதித்துள்ளன. ஆனால், இந்தியாவில் நாம் விலையை உயா்த்தவில்லை. பிரதமா் நரேந்திர மோடி நெருக்கடிகளை சிறப்பாக சமாளித்து வருகிறாா் என்றாா்.
தொடா்ந்து, கோழிக்கோடு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக அமித் ஷா பிரசாரம் செய்தாா்.
தொடர்புடையது
கேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடி

தோ்தலுக்குப் பிறகு விஜய்யுடன் பேசி தமிழகத்தில் தேஜக கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே

ஊடுருவல்காரா்களின் ஆதரவாளா் ராகுல் காந்தி: அஸ்ஸாமில் அமித் ஷா பிரசாரம்!

தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் ‘எதிரிகள்’! இடதுசாரி, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


