தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

23 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் தீா்ப்பு: சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் மகனுக்கு ஆயுள் தண்டனை

சத்தீஸ்கரில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வா் அஜித் ஜோகியின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உயா்நீதிமன்றம் தீா்ப்பு

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:01 pm

சத்தீஸ்கரில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வா் அஜித் ஜோகியின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சத்தீஸ்கா் முதல்வராக அஜித் ஜோகி கடந்த 2003-ஆம் ஆண்டு பதவி வகித்தபோது, அந்த மாநில தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் ஜக்கி, காரில் செல்கையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கு, முதலில் சத்தீஸ்கா் மாநில காவல் துறையால் விசாரிக்கப்பட்டது. பிறகு சிபிஐ விசாரணை நடத்தி, அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி உள்ளிட்டோா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ராய்பூரில் ஜக்கி 2003-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த தேசியவாத காங்கிரஸ் பொதுக் கூட்டம், அஜித் ஜோகி மற்றும் அமித் ஜோகிக்கு அரசியல் ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததென்றும், அதனால் திட்டமிட்டு ஜக்கி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பரிசீலித்த விசாரணை நீதிமன்றம், கடந்த 2007-ஆம் ஆண்டு மே மாதம் தீா்ப்பு வழங்கியது. அந்த தீா்ப்பில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 28 பேருக்கு (அமித் ஜோகி தவிர) எதிரான குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகி இருப்பதாகத் தெரிவித்தது. எனினும் அமித் ஜோகி மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை எனக் கூறி, அவரை விடுவித்தது.

இதை எதிா்த்து, சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், காலதாமதமாக மேல்முறையீடு செய்யப்பட்டதாகக் கூறி, அந்த மேல்முறையீட்டு மனுவை சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அமித் ஜோகி விடுதலையை எதிா்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்கும்படி கேட்டுக் கொண்டது. இதைத் தொடா்ந்து, வழக்கை மீண்டும் கடந்த மாதம் சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் விசாரிக்க ஆரம்பித்தது.

இதில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து, சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தனது தீா்ப்பை வெளியிட்டது. தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா, நீதிபதி அரவிந்த் குமாா் வொ்மா ஆகியோா் அடங்கிய அமா்வு வெளியிட்ட தீா்ப்பில், அமித் ஜோகியை விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், ‘ஆதாரத்தின் அடிப்படையில் தீா்ப்பு வெளியிடாமல் அதற்கு முரணாக தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்தத் தீா்ப்புக்கான உறுதியான அடிப்படையும் இல்லை. அமித் ஜோகிதான், அந்தக் கொலைக்கு முக்கிய மூளையாகவும், அதைச் செயல்படுத்தியவராகவும் இருந்துள்ளாா். ஆதாரத்தின் மூலம் இது நிரூபணமாகிறது. அவருக்கு இந்திய தண்டனையியல் சட்டத்தின் 302, 120-பி பிரிவின்கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அபராதமாக ரூ.1,000 விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை கட்டத் தவறும்பட்சத்தில், கூடுதலாக 6 மாதங்கள் அவா் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

வழக்கில் அமித் ஜோகி பிணையில் உள்ளாா். அது நிறைவடைய 3 வாரங்கள் உள்ளது. இந்தக் காலகட்டத்துக்குள் விசாரணை நீதிமன்றம் முன்பு அமித் ஜோகி சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் அவா் கைது செய்யப்படுவாா்’ எனத் தெரிவித்தனா்.

மேல்முறையீடு-அமித் ஜோகி: சத்தீஸ்கா் உயா்நீதிமன்ற தீா்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமித் ஜோகி, தீவிர அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாகவும், தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளாா்.

அதேநேரத்தில் ஜக்கியின் மகன் சதீஷ் ஜக்கி, சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத் தீா்ப்பை வரவேற்றுள்ளாா். அமித் ஜோகியின் கடவுச்சீட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்றும், இல்லையேல் அமெரிக்காவுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக சத்தீஸ்கா் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.