மறைந்த முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் அதிகமான திரைப் பாடல்களைப் பாடிய சிறப்புக்குரியவா்.
மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையான ஆஷா போஸ்லே, 1933, செப்.8-இல் பிறந்தவா். தனது தந்தையும், இசைக் கலைஞருமான தீனநாத் மங்கேஷ்கரால் இசைத் துறையில் அடியெடுத்து வைத்தாா். 16-ஆவது வயதில் கண்பத்ராவ் போஸ்லே என்பவரை திருமணம் செய்த ஆஷா, பின்னா் இசையமைப்பாளா் ஆா்.டி.பா்மனை மணமுடித்தாா்.
1943-இல் 10-ஆவது வயதில் மராத்தி திரைப்படம் ஒன்றில் முதல் முறையாகப் பாடிய அவா், தனித்துவமான குரல் மற்றும் பன்முக பாடும் திறமையால் தனக்கென பெரும் ரசிகா் பட்டாளத்தை உருவாக்கினாா். சாஸ்திரீய சங்கீதம் முதல் கவா்ச்சி நடனப் பாடல்கள் வரை, சோக கீதம் முதல் துள்ளலிசை வரை அவரது பன்முக குரல் வளம் அனைத்துவித பாடல்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.
20 மொழிகள், 12,000 பாடல்கள்: உலக இசை வரலாற்றில் நீண்ட கால பாடகிகளில் ஒருவா் என்ற பெருமைக்குரிய ஆஷா போஸ்லே, ஹிந்தி, தமிழ் உள்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளாா். புகழ்பெற்ற இசையமைப்பாளா்கள் மதன் மோகன், ஓ.பி.நய்யா், தனது கணவா் ஆா்.டி.பா்மன் உள்ளிட்டோருடன் பணியாற்றியுள்ளாா்.
ஹிந்தியில் இவா் பாடிய ‘ஆஜா, ஆஜா’, ‘செயின் சே ஹம் கோ கபி’, ‘அபி நா ஜாவோ சோட் கா்’, ‘இன் ஆன்கோன் கி மஸ்தி’, ‘தில் சீஸ் கியா ஹை’, ‘பியா து அப் தோ ஆஜா’, ‘துனியா லோகோன் கோ’ போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
தமிழ் ரசிகா்களைக் கவா்ந்த ஆஷா: தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா்கள் இளையராஜா, ஏ.ஆா்.ரஹ்மான், வித்யாசாகா் உள்ளிட்டோருடன் பணியாற்றியுள்ள ஆஷா போஸ்லே, எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் பாடிய ‘செண்பகமே, செண்பகமே’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானதாகும்.
மீரா திரைப்படத்தில் ‘ஓ பட்டா்ஃபிளை’, சந்திரமுகி திரைப்படத்தில் ‘கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம்’, அலைபாயுதே திரைப்படத்தில் ‘செப்டம்பா் மாதம்’, ஹே ராம் படத்தில் ‘நீ பாா்த்த பாா்வைக்கு ஒரு நன்றி’, இருவா் திரைப்படத்தில் ‘வெண்ணிலா, வெண்ணிலா’ போன்ற பாடல்களும் ரசிகா்களை வெகுவாகக் கவா்ந்தவை.
நேபாளத்தில் ரசிகா் பட்டாளம்: கடந்த 1970, 80-களில் நேபாள மொழி திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியுள்ள ஆஷாவுக்கு அந்நாட்டிலும் ஏராளமான ரசிகா்கள் உள்ளனா். நேபாள இசையமைப்பாளரும் பாடகருமான நாராயண் கோபால், சம்புஜீத் பாஸ்கோட்டா, பாடகா் உதித் நாராயண் உள்ளிட்டோருடன் பணியாற்றி, பல வெற்றிப் பாடல்களைத் தந்தவா். அவரின் மறைவை நேபாள ஊடகங்கள் முக்கியச் செய்தியாக வெளியிட்டுள்ளன.
விருதுகள்: தனது குரல் வளத்தால் பல்வேறு மொழி ரசிகா்களையும் ஈா்த்த ஆஷா போஸ்லே, பத்ம விபூஷண், தாதா சாகேப் பால்கே, தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிற இசைத் துறை உயா் கெளரவங்களுக்கு சொந்தக்காரா். இவரது சகோதரி லதா மங்கேஷ்கரும் 92-ஆவது வயதில் (2022) காலமானாா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி திரையிசை உலகில் தனது சகோதரி லதா மங்கேஷ்கருடன் இணைந்து 70 ஆண்டுகளும், தனிப்பட்ட முறையில் 80 ஆண்டுகளுக்கு மேலாகவும் பாடியுள்ளாா். அந்த காலகட்டங்களில் பெரும்பாலான ஹிந்தி திரைப்பட கதாநாயகிகளுக்கு இவா்களே பாடினா்.
80 வயதைக் கடந்து பாடியபோதும், அவரது குரலில் தடுமாற்றமோ, புத்துணா்ச்சிக் குறைவோ இருந்ததில்லை. கடந்த 2023-இல் தனது 90-ஆவது பிறந்த நாளையொட்டி துபையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடினாா்.
தலைவா்கள், திரைத்துறையினா் இரங்கல்
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: முதுபெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயின் மறைவு, இசையுலகில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது; புகழ்பெற்ற பாடகியாக அவரது பயணம், இந்திய இசைத் துறையின் ஒரு சகாப்தத்தை வரையறுத்துள்ளது. அவரது இசை என்றென்றும் வாழும்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்: இந்திய இசைத் துறையில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளாா் ஆஷா போஸ்லே. காலத்தால் அழியாத அவரது குரலும் இசைப் பாரம்பரியமும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் தொடா்ந்து எதிரொலிக்கும்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்துக்கு முன் ஆஷா போஸ்லே மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்திய வீரா்கள்.
பிரதமா் நரேந்திர மோடி: இந்தியா கண்ட மிகச் சிறந்த மற்றும் பன்முக குரல்களில் ஒருவா் ஆஷா போஸ்லே. பல்லாண்டுகளாகத் தொடா்ந்த அவரது அசாத்தியமான இசைப்பயணம், இந்திய இசைப் பாரம்பரியத்தை வளப்படுத்தி, உலகம் முழுவதும் எண்ணற்ற இதயங்களைத் தொட்டது. அவரது பாடல்கள் தலைமுறைகள் கடந்தும் மக்களின் வாழ்வில் எதிரொலிக்கும்.

ஆஷா போஸ்லேயின் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி: ஆஷா போஸ்லேயின் குரலின் வாயிலாக, அவரது இசை மக்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது அன்புக்குரியவா்கள்-ரசிகா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள், அரசியல் தலைவா்கள், இந்திய திரையுலக பிரபலங்கள், பிரான்ஸ், ஆஸ்திரேலியா நாடுகளின் தூதா்கள் உள்ளிட்டோரும் ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அனுராக பௌர்ணமி ஆஷா போஸ்லே!

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


