தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடிய ஆஷா போஸ்லே உலக அளவில் மிகவும் அதிகப் பாடல்களைப் பாடியவர். 1997-இல், கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப் பாடகியான இவர், 2006-இல் க்ரோனோஸ் குவார்டெட்டுடன் இணைந்து உருவாக்கிய 'யூ ஸ்டோலன் மை ஹார்ட்' என்ற படைப்புக்காக மற்றொரு பரிந்துரையையும் பெற்றார்.
அவர் கிராமி விருதைப் பெறவில்லை என்றாலும், பரிந்துரைகளே பெருமைக்குரியதாகஅமைந்தது. 2001-இல் தாதாசாகேப் பால்கே விருது, 2008-இல் பத்ம விபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
1940-ஆம் ஆண்டு முதல் மாறிவரும் இசைப் பாணிகளுக்கேற்ப தன்னையும் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டு எண்பது ஆண்டுகளாகப் பாடல்களைப் பாடி வந்த ஆஷா போஸ்லே திரைத்துறையில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர். லதா மங்கேஷ்கரின் நிழலாக, இன்னொரு இசை வடிவாக வாழ்ந்த ஆஷா போஸ்லே தனது 92-ஆவது வயதில் மும்பையில் ஏப்ரல் 12 -இல் மறைவுற்றார். இவரது அக்கா லதா மங்கேஷ்கரும்கூட தனது 92-ஆம் வயதில்தான் காலமானார்.
மகாராஷ்டிராவின் சாங்லியில் 1933-இல் பிறந்த ஆஷா, இளம் வயதிலேயே இசை உலகில் நுழைந்தார். தொடக்கத்தில் மராத்தி திரைப்படங்களில் நடித்த ஆஷா, 1940-இல் ஹிந்தித் திரைப்படங்களில் பாடினார். 1950-இல் 'சி.ஐ.டி.', 'தீஸ்ரி மன்ஸில்', 'டான்' போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இவரை திரைத்துறையில் நிலைநிறுத்தியது.
'குழந்தைப் பருவத்தில், அக்கா லதாவுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான குரல் இருந்தது. இரண்டு பாடல்களைப் பாடியவுடன் நான் பாடும் பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். அக்கா ஏற்கெனவே தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துவிட்டார். அவருக்கு நான் போட்டியாக இருக்க விரும்பவில்லை' என்று கூறி, ஆஷா போஸ்லே தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
இதற்காகவே இவர் ஆங்கிலப் பாடல்களைக் கேட்டார். ஆங்கிலப் பாடல்களை 'ஓபரா' பாணியில் பாடுவார்கள். அந்தக் குரலில் ஒரு நடுக்கம் இருக்கும். இங்கே இவர் பாடும்போது எந்த நடுக்கமும் இருக்காது. இந்தியப் பாடல்கள் இயல்பாகப் பாடப்படும். மேற்கத்திய பாணியில் பாடுவதை இந்தியாவில் அவர் அறிமுகப்படுத்த, ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இவர் கிளப், காபரே பாடல்களை வித்தியாசமாகப் பாடுவதாக எழுந்த விமர்சனங்களும் காலப்போக்கில் மறைந்தன.
1971-இல் வெளியான 'காரவன்' திரைப்படத்தின் புகழ்பெற்ற 'பியா து அப் தோ ஆஜா' பாடலை எழுதிய பாடலாசிரியர் மஜ்ரூ சுல்தான்புரி. இவர் எழுதிய சர்ச்சைக்குரிய பாடலையும் தயக்கமின்றி ஆஷா பாட, அது மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. வெற்றிப் பாடல்களைப் பாட பல நாள்கள் பயிற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். 'முதுமை அடைவதால் பாடுவதை நிறுத்துவதில்லை. மாறாக, பாடுவதை நிறுத்துவதாலேயே முதுமை அடைகிறோம்' என்ற உண்மையை அவர் முழுமையாக நிரூபித்தவர்.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான பிரட் லீ, ஆஷா போஸ்லேவுடன் இணைந்து பாடிய டூயட் பாடல் வரலாற்றுத் தருணமாகவே அமைந்தது. 'ஆஷா அன்ட் பிரண்ட்ஸ்' என்ற ஆல்பத்தில் இடம்பெற்ற 'யூ ஆர் த ஒன் பார் மீ' என்ற தலைப்பிலான இந்தப் பாடலில் பிரட் லீ பாடிய ஹிந்திப் பாடலில், 'ஆம், நான் உனக்குச் சொந்தமானவன். என்றென்றும் உனக்கே சொந்தமாக இருப்பேன்'' என்று வரிகள் இசை, கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக மகிழ்வித்தது.
தனது சுயசரிதையான 'எனது வாழ்க்கை'யில் பிரட் லீயும் பாடகி ஆஷா போஸ்லேவை ‘இந்திய இசையின் அரேதா ஃபிராங்க்ளின்' என்று வர்ணித்துள்ளார். இந்த இசை வீடியோ 2006-இல் பிரட் லீ 'சாம்பியன்ஸ் டிராபி' போட்டிகளுக்காக இந்தியா வந்திருந்த சமயத்தில் படமாக்கப்பட்டது.
'இந்தியாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்காக நாங்கள் ஒருநாள் போட்டி மனநிலையில் தொடர்ந்து பயணித்தோம். அந்தச் சுற்றுப்பயணம் கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. 2004-இல் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளினி சிமி கரேவால் தனது 'ரெண்டெஸ்வஸ்' நிகழ்ச்சியில் என்னை நேர்காணல் செய்தார். அப்போது நான் சில பாடல்களைப் பாடினேன். அதில் 'முக்காபுலா' பாடலும் ஒன்று.
என்னுடன் இணைந்து ஓர் இசைப் படைப்பை உருவாக்க ஆர்வமாக இருந்த சில ஒலிப்பதிவு நிறுவனப் பிரதிநிதிகளை அணுகி, ஆஷா போஸ்லேவுடன் இணைந்து, இசைத் தொகுப்பு ஆல்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். ஊர் சுற்றப் போகிறேன் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு, பாடலைப் பாடிவிட்டு வந்தேன்'' என்றார் பிரெட் லீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000 திரைப் பாடல்களைப் பாடிய ஆஷா போஸ்லே!

அனுராக பௌர்ணமி ஆஷா போஸ்லே!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

