முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

திரையில் தோன்றி பாடல்களுக்கு உயிரூட்டிய இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜா திரையில் தோன்றி பாடிய பாடல்கள் பற்றி..

News image

இளையராஜா - file photo

Updated On :2 ஜூன் 2026, 1:25 pm IST

'இசைஞானி' இளையராஜாவின் 83-வது பிறந்தநாள் இன்று. இசை மாமேதையின் பிறந்தநாளையொட்டி உலகளவில் உள்ள அவரது ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

1943-ஆம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி தேனியில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜாவின் இயற்பெயர் ஞானதேசிகன். பள்ளி சேர்க்கையின்போது இவரது பெயரை ராஜய்யா என்ற மாற்றினர் அவரது பெற்றோர். இவர் இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி. இப்படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ராஜய்யாவின் பெயருக்கு முன்னால் இளைய என்பதைச் சேர்த்து "இளையராஜா" என்று அழைத்தார்.

உலகமே வியந்து அதிசயிக்கும் இசையமைப்பாளர் இளையராஜா ஆயிரத்தி ஐநூறு திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார். பல்லாயிரம் பாடல்கள், அதைவிட அதிகமான பின்னணி இசைகளை இசைத்துள்ளார். தேநீர்க் கடைகள் தொடங்கி பேருந்துகள் வரை இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை. இன்னிசை ராகங்கள், சோகப் பாடல்கள், துள்ளல் இசை, மனதை மயக்கும் இரவு கானங்கள் என ராஜாவின் விதவிதமான பாடல்கள் என்றும் பசுமையாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், பாடகராகவும் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது குரல் பல பாடல்களுக்குத் தனித்துவமான உணர்வை வழங்கியதுபோல, சில திரைப்படங்களில் அவர் நேரடியாகத் திரையில் தோன்றியதும் அந்தப் பாடல்களின் அழகை மேலும் உயர்த்தியது. நடிகராகத் தன்னை முன்னிறுத்தும் முயற்சியாக அல்லாமல் இசையும் காட்சியும் ஒன்றிணையும் தருணங்களில் தோன்றிய அவரது இயல்பான வருகைகள் ரசிகர்களின் நினைவில் இன்றும் நீங்காத இடம் பெற்றுள்ளன.

மடை திறந்து பாயும் நதியலை நான்"

மடை திறந்து பாயும் நதியலை நான்"

இளையராஜாவின் திரைத் தோற்றங்களில் மிகவும் புகழ்பெற்றது "நிழல்கள்" திரைப்படத்தின் "மடை திறந்து பாயும் நதியலை நான்" பாடலாகும். ஒரு இசைக்கலைஞன் தனது வாழ்க்கைப் பயணத்தையும் போராட்டத்தையும் வெளிப்படுத்தும் அந்தப் பாடலில், தேர்ந்த நடிகரைப்போல உணர்ச்சிகரமாக நடித்திருந்தார். இதுவே, ராஜா திரையில் தோன்றி பாடிய அவரது முதல் பாடல்.

"ஓ வானம்பாடி" பாடலில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து பதிவு அறையில் பாடுவது போன்ற காட்சி மிகப் பிரபலம். திரையில் மிக இயல்பாகத் தோன்றிய இளையராஜாவின் இந்த வருகை, பாடலின் உணர்வை மேலும் வலுப்படுத்தியது.

"நான் தேடும் செவ்வந்திப் பூ" பாடலில் இளையராஜாவின் தோற்றம், நடிகர்கள் கார்த்திக் மற்றும் ஜீவிதாவின் காதல் காட்சிகளுக்குக் கூடுதல் மென்மையையும் இனிமையையும் சேர்த்தது. பாடலின் இசை மட்டுமல்ல, அதில் தோன்றிய இசையமைப்பாளரின் வருகையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

"கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" பாடலில் இளையராஜா தோன்றிய விதமும் குறிப்பிடத்தக்கது. பாடலின் உணர்வோடு ஒன்றிப்போன அவரது காட்சி, திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை மேலும் உயர்த்தியது.

"கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" பாடலில் ...

"கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" பாடலில் ...

இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறப்புத் தோற்றங்களாக இளையராஜா ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். "பாட்டாலே புத்தி சொன்னார்" திரைப்படத்தின் தொடக்கப் பாடலில் அவர் தோன்றினார். "என்னை ஒருவன் பாடச் சொன்னான்" பாடல் காட்சியிலும் அவரது வருகை இடம்பெற்றது. "அம்மன் புகழை" பாடலில் சிறப்புத் தோற்றமாக வந்த அவர், பாடலின் பக்தி உணர்வை வலுப்படுத்தினார்.

அதேபோல் "உலகம் இப்போ" மற்றும் "காதலே இல்லாத தேசம்" போன்ற பாடல் காட்சிகளிலும் இளையராஜா நேரடியாகத் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இசையமைப்பாளராகப் பின்னணியில் இருந்து நூற்றுக்கணக்கான படைப்புகளை வழங்கிய அவர், அவ்வப்போது திரையில் தோன்றிய இந்த அரிய தருணங்கள் ரசிகர்களுக்குக் கூடுதல் விருந்தாக அமைந்தன.

பொதுவாக இசையமைப்பாளர்கள் திரைக்குப் பின்னாலேயே இருப்பார்கள். ஆனால் இளையராஜா தோன்றிய சில பாடல் காட்சிகள், இசை உருவாகும் மனிதரையும் ரசிகர்களுக்கு நெருக்கமாகக் காட்டின. அதனால்தான், அவரது இந்த அரிய திரைத் தோற்றங்கள் இன்று வரை இசை ரசிகர்களின் நினைவுகளில் தனி அத்தியாயமாகத் திகழ்கின்றன.

Summary

Today marks the 83rd birthday of 'Isaignani' Ilaiyaraaja. On the occasion of this musical maestro's birthday, fans across the globe are extending their wishes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.