ஆழமான சிந்தனை கொண்டவர்கள் எழுத முயற்சிப்பதோ, படமாக எடுக்க நினைப்பதோ, ஒவியமாகவோ, சிலையாகவோ அல்லது வேறு ஏதேனும் கலை வடிவமாகவோ மாற்ற முயற்சிப்பதோ பெரும்பாலும் இளைய தலைமுறையினரிடம் சென்று சேர்வதில்லை என்று பலர் கூறுவதுண்டு. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றத்தைக் கூறலாம்.
ஆனால், இளைய தலைமுறையினர் மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டு, காலத்திற்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் இருந்ததே தவிர, இத்தகைய குற்றச்சாட்டு அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது.
ஆனால், இதில் தப்பித்தவர் இளையராஜா என்று மட்டும் கூற முடியும். இசை அனைத்து தலைமுறையினருக்கும் பிடிக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும், அதைக் கொடுத்து, ரசிக்க வைத்து காணாமல் போனவர்கள் பலர். ஆனால், இளையராஜா மட்டும் தலைமுறைகள் தாண்டி இன்னும் அதே ஈர்ப்புடன் இருக்கிறார்.
தியாகராஜன் குமாரராஜா, பா. ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், மாரி செல்வராஜ் என தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குநர்களும் இளையராஜாவுடன் ஒரு படமாவது பணிபுரிந்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் இருப்பதே இதற்கு பெரிய உதாரணம். இவர்கள் அனைவருமே தங்களின் அடுத்த படத்தை இளையராஜா இசையில் இயக்குகின்றனர்.
ஒரு படத்தின் வணிக வெற்றியை முதல் மூன்று நாள்கள்தான் தீர்மானிக்கின்றன. திரையரங்குகளின் முதல் 3 நாள்கள் கூட்டங்களில் பெரும்பான்மையாகக் காணப்படுவது 2கே, ஜென் ஸீ எனப்படும் இக்கால தலைமுறையினரே. இருந்தபோதும் முன்னணி இயக்குநர்கள் இளையராஜாவைத் தேர்வு செய்கின்றனர். ஏன்?
தற்போதைய இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், முதல் படம் முடிப்பதற்கு முன்பே 7 படங்களில் ஒப்பந்தமானார். ரஜினி, கமல், அஜித், சிவகார்த்திகேயன் என பெரிய நடிகர்களின் அடுத்தடுத்த படங்களுக்கு அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருந்தபோதும் இவர்களுக்கு இணையான பட வரிசைகளை இளையராஜாவும் கொண்டுள்ளார். அதுவும் கதை, திரைக்கதையில் தீர்க்கமாக உள்ள இயக்குநர்களுடன். எப்படி?
ஏன்? எப்படி? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். காலங்களைத் தாண்டியும் இளையராஜா இருப்பார், அவரின் பாடல்களை, இசையை காலமாற்ற ரசனைக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள முடியும் என்பதால்தான்.
இன்று வெளியாகும் தமிழ் சினிமாவில், ரெட்ரோ பாடல்கள் என்ற பெயரில், பழைய பாடல்களை அப்படியே எடுத்து வைத்து பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. ரஜினி, கமலை இயக்கிய லோகேஷ் கனகராஜ் முதல் டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்த் வரை பல இயக்குநர்கள் இதே பாணியைப் பின்பற்றுகின்றனர்.
திரைக்கதையில் சாதாரண நகர்வில் இருந்து ஒரு காட்சி ஒருபடி மேலே மேம்பட்ட தளத்திற்குச் செல்வதைக் குறிக்கும் விதமாக இந்த ரெட்ரோ பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் இளையராஜா பாடல்கள்தான்.
அது எந்த அளவுக்கு என்றால், இது பழைய பாடல், இன்னொரு படத்தில் இடம்பெற்ற பாடல் என்பதையே மறந்து, புதிய படத்தில் இடம்பெற்ற பாடல் என்று நினைத்தே ஜென் ஸீ தலைமுறை அப்பாடலை கொண்டாடுகிறது. இயக்குநர் கஸ்தூரி ராஜாவே இதனை வெளிப்படையாகக் கூறியுள்ளார். நிதானித்து, பிறகு உண்மை தெரிந்து அந்த பழைய பாடலைக் கேட்கத் தொடங்குகின்றனர்.
இப்படி இளையராஜாவின் பல பாடல்களை இக்கால தலைமுறையினர் தெரிந்துகொண்டது ரெட்ரோ பாடல்களாகத்தான். இப்பாடல்களை ஜென் ஸீ தலைமுறையினர் கொண்டாடி ரீல்ஸ் விடியோக்களையும் பதிவிடுகின்றனர்.
இளையராஜாவின் பாடல்களைக் கேட்பவர்கள் பழைய ஆள்கள் என்ற நிலை இடையில் இருந்ததையும் காண முடிந்தது. புதுப் படங்களில் இடம்பெற்ற ரெட்ரோ பாடல்கள் மூலம் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இளசுகளயும் நடனமாட வைத்தது இளையராஜா பாடல்கள்.
இளையராஜாவின் பாடல்கள் கேட்பவர்கள், ஸ்டேட்டஸ் வைப்பவர்கள் எல்லாம் அறிவுஜீவிகள் என்ற மனப்பான்மையும் இருந்தது. இளையராஜா பாடல்கள் குறித்து பொதுவெளியில் பேசுபவர்கள் இசையைக் கரைத்துக் குடித்தவர்கள் என்ற நிலையும் ஜென் ஸீக்களிடம் இருந்தது. ஆனால், இவை எல்லாம் அவர்கள் இளையராஜாவைக் கேட்கத் தொடங்கும் வரைதான்.
காதல், கொண்டாட்டம், தனிமை, சோகம், வருத்தம் போன்ற உணர்வுகள் எக்காலத்திற்கும் மாறாதது. இந்த உணர்வுகளின் மேலோட்டத்தில் பலருக்கும் துணையாக இருப்பது பெரும்பாலும் இசைதான். இந்த உணர்வுகளை கடக்கும் ஒவ்வொரு ஜென் ஸீயும் இளையராஜாவை ஒருமுறையேனும் கேட்டு சிலாகித்திருப்பார்கள்.
எனில், ஒரு பாடல் கேட்கப்படுவதற்கு, கேட்ட பாடல் ஒரு மருந்துபோல மாறி என்றுமே நன்றியுடன் நினைவுகூரப்படுவதற்கு உணர்வுகள் அடிப்படையாக இருக்கின்றன.
ஜென் ஸீ தலைமுறையினர் எதையுமே எளிதாக எடுத்துக்கொண்டு கடப்பவர்களைப்போல தோன்றினாலும், சட்டென அடுத்தடுத்த மனநிலைக்கு மாறக்கூடியவர்களாக இருந்தாலும், அவர்களும் மேற்சொன்ன உணர்வுகளைத் தாண்டியாகத்தான் வேண்டும். அப்போது பெரும்பாலும் அவர்களால் இளையராஜாவின் பாடல்களைக் கடக்காமல் செல்ல முடியாது.
பெரிய அரசியல் விவகாரங்களைக்கூட மீம்ஸ் மூலம் இளம் தலைமுறை ரத்தினச் சுருக்கமாகவும் அதேவேளையில் கேலியாகவும் சொல்லிவிடுகின்றனர். அந்தவகையில் இளையராஜாவின் பல பாடல்களுக்கு அவர்கள் போட்ட மீம்ஸ்கள், அப்பாடலின் தன்மையை ரசனையை எளிதில் சொல்லிவிடுகின்றன.
இதுமட்டுமின்றி ரீல்ஸ், ஷாட்ஸ் விடியோக்களில் இளம்பெண்கள் புடவையுடன் நடனமாடியோ அல்லது ரயிலில், பேருந்தில் செல்வதைப்போல பதிவிடும் பல விடியோக்களில் இளையராஜாவின் பாடல்களையே தேர்வு செய்கின்றனர்.
ரீல்ஸ்களில் பார்த்து, கேட்டு பிடித்துப்போய்விட்ட பல பாடல்களை ஜென் ஸீ தலைமுறை, யூடியூபிலோ, ஸ்பாட்டிஃபையிலோ தேடிப்போய் பாடலைக் கேட்டு ரசிக்கின்றனர். இப்படி ஜென் ஸீ தலைமுறையில் பல இளையராஜா ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
முன்பு, நமது அப்பா வீட்டில் வைக்கும் பாடலைக் கேட்டு வளர்ந்த தலைமுறை மாறி, இப்போதைய ஜென் ஸீ தலைமுறை தேடித்தேடிப் போய் பாடல்களைக் கேட்கும் வசதியைப் பெற்றுள்ளன. இதனால், முன்பைவிட இளையராஜா வேகமாக இளம் தலைமுறையிடம் சென்று சேர்ந்துள்ளார் என்று கூறலாம்.
சொல்லப்போனால் ஜென் ஸீ தலைமுறையில் பலருக்கு பாடலின் உண்மையான காட்சி தெரியாது. படத்தின் பெயர் தெரியாது. நாயகன், நாயகி தெரியாது. ஆனால், அது இளையராஜா பாடல் என்று தெரியும். பாடலின் உணர்வு அவர்களை அப்பாடலில் திளைக்கச் செய்கிறது.
டியூட் படத்தில் கருத்த மச்சான்... மாரீசன் படத்தில் நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்... கூலி படத்தில் வா வா பக்கம் வா... சூப்பர் டீலக்ஸ் படத்தில் அந்தியில வானம்... கருப்பு படத்தில் போராடடா வாளேந்தடா என பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.
மேடைக் கச்சேரிகளில் ஒரு பாடல் உருவான விதம் குறித்து விரிவாகப் பேசி அந்த பாடலைப் பாடத் தொடங்குவார்கள். அது அப்பாடல் மீதான எதிர்பார்ப்பை, சுவாரசியத்தை அதிகரிக்கும். இப்போது மேடைக் கச்சேரிகள் குறைந்துவிட்டன. ஆனால், இசையமைப்பாளர்கள் நடத்தும் இசைக் கச்சேரிகள் அதிகமாகியுள்ளன. இது வரவேற்கத்தக்கது.
இசைஞானி இளையராஜா சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்திய வேலியன்ட் சிம்பொனி இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலும் இளம் தலைமுறையினரே.
இன்ஸ்டாகிராமில் காணக்கிடைக்கும் இளையராஜா கச்சேரி விடியோக்களைப் பார்த்தால், ஜென் ஸீ தலைமுறையினர் இளையராஜாவை கொண்டாடும் விதத்தைப் புரிந்துகொள்ள முடியும். இசைக் கச்சேரிக்குச் செல்பவர்களைப் பொழுதுபோக்கிற்காக, வார இறுதியில் எங்காவது போக வேண்டும் எனப் போகிறார்கள் என்று கூறிவிட முடியாது.
இளையராஜா இசையை வெறும் திரைப்படப் பாடல்களாக மட்டுமே கேட்டுப் பழகிவிட்ட பிறகு அவர் அமைத்த ஹளவ் டூ நேம் இட், நத்திங் பட் வின்ட் போன்ற செவ்வியல் இசையை, திரைப் பாடல்களை உள்வாங்கிய அளவுக்கு கொண்டாடவில்லை.
ஹெளவ் டூ நேம் இட் இசையில் ’டூ எனிதிங்’ என்ற ஒரு சிறிய பகுதி, பாலு மகேந்திராவின் வீடு படத்தில் இடம்பெற்றிருந்ததால்தான் பிரபலமானது. இல்லையென்றால் கவனம் பெறாமலேயே போயிருக்கும்.
ஆனால், இப்போது அப்படி இல்லை. சமீபத்தில் லண்டனில் வேலியன்ட் என்ற சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றியிருந்தார். இதனை இப்போது பலரும் கொண்டாடுவதற்கு காரணம் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் ஜென் ஸீ தலைமுறையினரே.
சென்னையில் இரு நாள்கள் நடைபெற்ற இளையராஜா இசைக் கச்சேரியில்கூட, முதல் நாளில் வேலியன்ட் சிம்பொனி நேரலையாக இசைக்கப்பட்டது. இளையராஜாவின் விரல் அசைவில் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் வாசித்த பிரமாண்டத்தை, இளம் தலைமுறை பெருமையுடன் கொண்டாடித் தீர்த்தது. படத்தில் இடம்பெறவில்லை என்றாலும், அந்த இசையை கேட்டு அனுபவிக்கின்றனர்.
கச்சேரியின் மறுநாள், கண்ணே கலைமானே, பனிவிழும் இரவு நனைந்தது நிலவு, அன்பே சிவம் படத்தின் நீ பார்த்த பார்வைக்கோர் நன்றி... போன்ற பாடல்கள் சிம்பொனியாக இசைக்கப்பட்டது.
முத்தாய்ப்பாக, இதயம் போகுதே... பாடலை இளையராஜாவே மேடையில் தோன்றி பாடினார். சிம்பொனியில் வாத்தியங்கள் முடிந்து, இதயம் போகுதே... என அவர் குரலில் வார்த்தை வரும்போது, எழுந்த கொண்டாட்ட ஒலியில் இளம் தலைமுறையினரின் குரல்களே அதிகம்.
Summary
Ilaiyaraaja birthday special artical isaignani Among Gen Z
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கண்ணதாசன் அல்ல, கலைமகள் தாசன்!

சொல்லப் போனால்... ஜென் ஸீக்களும் பூமர்களும்!

தமிழ்க் குடும்பங்களின் புறக்கணிக்க முடியாத கலாசாரம் இளையராஜா!

80களில் இசையுலகை ஆட்சி செய்த இளையராஜா!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


