தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த முக்கிய கோரிக்கைகள் மற்றும் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய துறை அமைச்சர்கள் அளித்த எழுத்துபூர்வ பதில்களை இங்கே தொகுத்துள்ளோம்.

News image

நாடாளுமன்றம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 5:40 am IST

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த முக்கிய கோரிக்கைகள் மற்றும் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய துறை அமைச்சர்கள் அளித்த எழுத்துபூர்வ பதில்களை இங்கே தொகுத்துள்ளோம்.

மக்களவையில்...

தமிழக கிராமப்புற வளர்ச்சித் திட்ட நிலை என்ன?

ஆ.ராசாவின் (திமுக) கேள்விக்கு மத்திய இணையமைச்சர் கம்லேஷ் பாஸ்வான் அளித்த பதிலில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டம், கிராமப்புற சாலைகள் திட்டம், தீன்தயாள் அந்தியோதயா வாழ்வாதார திட்டம், கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தேசிய சமூக உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக் கடன் தரவுகள் அரசிடம் உள்ளதா?

எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்) எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செüதரி அளித்த பதிலில், "வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நகைக் கடன் குறித்த மாநில அளவிலான தனிப்பட்ட தரவுகளை ரிசர்வ் வங்கி பராமரிக்கவில்லை. இருப்பினும், கிராமப்புற மற்றும் சிறு, குறு தொழிலாளர்களை முறைசாரா கந்து வட்டிக்காரர்களிடம் பாதுகாக்கும் வகையில் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் எளிதாகக் கிடைக்கக் கூடிய நகைக் கடன்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளதா?

ஜோதிமணி (காங்கிரஸ்) எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே அளித்த பதிலில், "நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் வேலையில்லா விகிதம் 2022-இல் 3.7%-லிருந்து 2025-இல் 3.1%-ஆகவும், பெண்களின் விகிதம் 3.1%-ஆகவும் உள்ளது. பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வி படித்தவர்களின் வேலையில்லா விகிதம் 2025-இல் 6.5%-ஆக உள்ளதாகவும், நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்!

ஜி.செல்வம் (திமுக) அவையில் விதி 377-இன் கீழ் பதிவு செய்த கோரிக்கை வருமாறு: காஞ்சிபுரம், உத்தரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் விரைவான நகரமயமாக்கல், நிலத்தடி நீர் மட்டம் குறைதல் மற்றும் கடல் நீர் உள்நுழைதல் போன்றவற்றால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் லாரிகள் மூலம் வரும் தண்ணீரை மட்டுமே மக்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, தமிழக அரசுடன் இணைந்து ஜல் ஜீவன் திட்டத்தில் ஏரி, குளங்களைச் சீரமைத்தல், மழைநீர் சேகரிப்பு மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்குத் தேவையான நிதி உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் தேசிய சமூக உதவி திட்ட நிதி உயர்த்தப்பட்டதா?

கணபதி ராஜ்குமார் மற்றும் தங்க தமிழ்செல்வன் ( திமுக) ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கம்லேஷ் பாஸ்வான் அளித்த பதிலில், "இத்திட்டத்தில் தமிழகத்தில் 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் 18,84,654 பேர் பலனடைந்தனர். 2023-24 முதல் 2025-26 வரையிலான ஆண்டுகளில் இது 19,39,303-ஆக அதிகரித்துள்ளது. இத்திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு 2023-24-இல் ரூ.675.95 கோடியும், 2024-25-இல் ரூ.640.77 கோடியும், 2025-26-இல் ரூ.440.49 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறால் வளர்ப்பு விவசாயிகளுக்கு எத்தகைய ஆதரவு தரப்படுகிறது?

தமிழச்சி தங்கபாண்டியனின் (திமுக) கேள்விக்கு, மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அளித்த பதிலில், "பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் கீழ் தமிழ்நாட்டில் ரூ.2.59 கோடி செலவில் 37 இறால் வளர்ப்பு குளங்கள், ரூ.40 லட்சத்தில் நோயறிதல் ஆய்வகம் மற்றும் ரூ.5.20 கோடி செலவில் 7 மீன் தீவன ஆலை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்சார் வளங்களைக் காக்க என்ன திட்டம் உள்ளது?

கதிர் ஆனந்த் (திமுக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அளித்த பதிலில், "பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் கடல் ஆமைகளைப் பாதுகாக்க "டர்டில் எக்ஸ்க்ளூடர்' கருவிகள் வழங்குதல், செயற்கைப் பாறைகள் அமைத்தல் மற்றும் கடல்சார் ஜீவராசிகளைப் பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நவீன ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை ஊக்குவித்துச் சிறு மீனவர்களின் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் கிராமப்புற சாலைகள் திட்ட நிலவரம் என்ன?

அருண் நேருவின் (திமுக) கேள்விக்கு மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை இணையமைச்சர் கம்லேஷ் பாஸ்வான் அளித்த பதிலில், "கடந்த ஜூலை 30 நிலவரப்படி, பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட கரூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 73 கி.மீ. தொலைவுக்கு 19 சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முந்தைய நிலுவை சாலைப் பணிகளையும் சேர்த்து மொத்தம் 112 கி.மீ. தொலைவிலான 29 சாலைப் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில்...

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட சூரியஒளி பம்புகள் எத்தனை?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்úஸô நாயக் அளித்த பதிலில், "மாநில அரசுகள் அளிக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் பிஎம்-குசும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசு அளித்த முன்தேதியிட்ட திட்டங்களின் அடிப்படையில் தமிழகத்துக்கு 5,187 சூரியசக்தி பம்புகள் ஒதுக்கப்பட்டன. இதன் மூலம் பகல் நேரத்தில் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதுடன் மரபுசார் மின்சாரத்தை சார்ந்திருத்தல் குறையும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கிராமப்புற சுகாதார கட்டமைப்பு எப்படி உள்ளது?

ஆர்.தர்மர் (அதிமுக) எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் அளித் பதிலில், "இந்திய சுகாதார திட்டம் 2023-24 அறிக்கையின்படி தமிழகத்தில் 445 சமூக சுகாதார மையங்கள் (388 கிராமப்புறம், 39 நகர்ப்புறம், 18 மலைப்பகுதி), 266 தாலுகா அளவிலான மருத்துவமனைகள் மற்றும் 37 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுடன் கூடிய அதிநவீனப் பொது சுகாதார கட்டமைப்பு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது' என்று குறிப்பிட்டபட்டுள்ளது.

பிஎம் தொழில்பயிற்சித் திட்ட நிலை என்ன?

கமல்ஹாசன் (மநீம) எழுப்பிய கேள்விக்கு, மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா அளித்த பதிலில், "பிரதமரின் தொழில்பயிற்சித் திட்டத்தில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து இரு கட்டங்களாக ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. முதல் கட்டத்தில் 1,683 பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, 195 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அதில் 82 பேர் பயிற்சியை முடித்துள்ளனர். இரண்டாம் கட்டத்தில் 1,656 பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதில் 239 பேர் பயிற்சியில் சேர்ந்த நிலையில் 59 பேர் அதை நிறைவு செய்துள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.