நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எழுப்பிய முக்கிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள்அளித்துள்ள பதில்களின் சுருக்கம் வருமாறு:
மக்களவையில்...
சேலம் உருக்கு ஆலையின் நவீன திறன்கள் என்ன?
இது குறித்து மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு எழுப்பிய கேள்விக்கு, மத்திய எஃகு துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா அளித்த பதிலில், "சேலம் உருக்கு ஆலையின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. உற்பத்தியைப் பெருக்கவும், மதிப்பு கூட்டப்பட்ட துருப்பிடிக்காத எஃகு உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்துக்கான வரிப் பகிர்வு குறைகிறதா?
இது குறித்து திமுக எம்.பி.க்கள் கனிமொழி, கே.இ. பிரகாஷ் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி அளித்த எழுத்துபூர்வ பதிலில், "16-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்துக்கான வரிப் பகிர்வு 4.097 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது (15-ஆவது நிதிக் குழுவில் 4.079%)' என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி முத்துக்கு எப்போது புவிசார் குறியீடு?
தூத்துக்குடி முத்துக்கு புவிசார் குறியீடு வழங்கும் நிலை குறித்து எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்துள்ள பதிலில், "இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. நிலுவையிலுள்ள படிவச் சரிபார்ப்பு அறிக்கைக்கு விண்ணப்பதாரர் பதிலளித்ததும், சட்ட விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியில் தமிழகத்தின் தர நிலை என்ன?
நாட்டின் மொத்த வர்த்தக ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு என்ன? என்று எம்.பி.க்கள் ஜி. செல்வம், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்துள்ள பதிலில்,
"கடந்த 2025-26 நிதியாண்டில் தமிழகத்தின் ஏற்றுமதி மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் 5,890 கோடியை எட்டியுள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
கழிவுநீர் தொட்டி உயிரிழப்புகள் விவரம் என்ன?
கைகளால் கழிவுநீர் கழிவுகளை தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களின் உயிரிழப்புகள் குறித்து விடுதலை சிறுத்தைகல் கட்சி உறுப்பினர் டி. ரவிகுமார் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராமதாஸ் அதாவலே அளித்த பதிலில், "தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30-ஆம் தேதிவரை கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தப்படுத்தும்போது 38 பேர் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டத்தை மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி பிஎச்இஎல் நவீனமயமாகியுள்ளதா?
இது குறித்து மதிமுக உறுப்பினர் துரை வைகோ எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா பதிலளிக்கையில், "பிஎச்இஎல் திருச்சி பிரிவை மேம்படுத்த ரூ.70 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்நிறுவனத்துக்கான ஆர்டர்கள் ரூ.43,927 கோடியாக உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இ-ரிக்ஷô சைபர் பாதுகாப்பு ஆபத்தானதா?
இ-ரிக்ஷô பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் எழுப்பிய கேள்விக்கு, மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா அளித்த பதிலில், "இ-ரிக்ஷôக்களில் உள்ள ப்ளூடூத் குறைபாடுகளைப் பயன்படுத்தி அவற்றின் பேட்டரிகளை செயலிழக்க வைக்கும் கைப்பேசி செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்படாத அத்தகைய செயலிகளை ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ப்ளே ஸ்டோர்களில் நீக்க "சிஇஆர்டி-ஐஎன்' என்ற இந்திய கணினி அவசரகால எதிர்வினை குழு நடவடிக்கை எடுத்துள்ளது' என்று கூறியுள்ளார்.
மாநிலங்களவையில்...
தன்னிறைவடைந்ததா கலங்கரை விளக்கங்கள்?
இது குறித்து மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை எழுப்பிய கேள்விக்கு, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் அளித்த பதிலில், "சென்னை கலங்கரை விளக்கத்தில் (லைட்ஹவுஸ்) அதிநவீன ரேடார், நவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், ராமேசுவரம், பாண்டியன் தீவு ஆகிய நிலையங்கள் அதிநவீன மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளார்.
அமோனியா வாயு கசிவு இனி தடுக்கப்படுமா?
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தை மேற்கோள்காட்டி அதிமுக எம்.பி. தனபால் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் பதிலளிக்கையில் "ஆபத்தான ரசாயனங்கள் கையாளப்படும் இடங்களில் தொழிலாளர்கள் தங்க வைக்கப்படக் கூடாது என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது' என்றார்.
ஜன் தன் கணக்குகள் எத்தனை?
தமிழகத்தில் ஜன் தன் கணக்குகள் குறித்து அதிமுக உறுப்பினர் ஆர். தர்மர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி பதிலளிக்கையில் "தமிழகத்தில் 1.91 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டு, 99.98% கிராமங்களுக்கு வங்கிச் சேவைகள் சென்றடைந்துள்ளன' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கட்டுக்குள் உள்ளதா?
இது குறித்து திமுக எம்.பி. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் பி.எல். வர்மா பதிலளிக்கையில், "நாடு முழுவதும் 579 மையங்கள் மூலம் 41 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கண்காணிக்கப்பட்டு, அவசியமான பொருள்கள் கையிருப்பில் இருப்பதன் மூலம் அவற்றின் விலை சீராக வைக்கப்படுகிறது' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









