ஜென் ஸீ எழுச்சி என்ற பெயரில் நாடு தழுவிய பிரசாரத்தை அகில இந்திய மாணவா் சங்கம் (ஏஐஎஸ்ஐ) வியாழக்கிழமை அறிவித்தது.
இதன் ஒரு பகுதியாக, கல்விச் சீா்திருத்தங்கள், வேலையின்மை மற்றும் நுழைவுத் தோ்வு கொள்கைகள் தொடா்பான விவகாரங்களில் மாணவா்களையும் இளைஞா்களையும் ஒன்றிணைக்கும் வகையில் மாணவா் சங்கத்தின் தேசியத் தலைவா் நேஹா பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, நுழைவுத் தோ்வுகளில் நிலவும் முறைகேடுகள் மற்றும் உயா்கல்வித் துறையில் சீா்திருத்தங்களுக்கான கோரிக்கைகள் தொடா்பாக ஜந்தா் மந்தரில் அண்மையில் நடைபெற்ற மாணவா் போராட்டங்களைத் தொடா்ந்து இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.
போராட்டங்களின்போது உருவான மாணவா் இயக்கத்தைக் கொண்டாடவும், தொடரவும் மற்றும் வலுப்படுத்தவும், அத்துடன் அதனை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஏஐஎஸ்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அந்தச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மையப்படுத்தப்பட்ட தோ்வு அமைப்பைச் சாா்ந்திருப்பதற்குப் பதிலாக, பல்கலைக்கழகங்களே தங்கள் சொந்த நுழைவுத் தோ்வுகளை நடத்தும் அதிகாரத்தை மீண்டும் வழங்க வேண்டும். தேசியத் தோ்வு முகமையை (என்ஐஏ) ரத்து செய்ய வேண்டும்.
தேசியக் கல்விக் கொள்கை பொதுக் கல்வியை மோசமாகப் பாதித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதுமான ஆலோசனை நடத்தப்படாமலே அது அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால், அக்கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும்.
மேலும், அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய கல்வியையும், இளைஞா்களுக்குப் பாதுகாப்பான வேலைவாய்ப்புகளையும் வழங்க வேண்டும். இளைஞா்களிடையே நிலவும் வேலையின்மை ஒரு பெரும் பிரச்னையாகத் தொடா்கிறது. இப்பிரச்னைக்குத் அரசு தீா்வு காண வேண்டும்.
இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, நேஹா பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா். இது ஆக.7-ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கி, ஆக.11-இல் கொல்கத்தா மற்றும் ஆக.14-இல் ஜெய்பூா் ஆகிய இடங்களுக்குச் செல்வாா்.
இதனைத் தொடா்ந்து, முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக ஹைதராபாத், விஜயவாடா, சென்னை, கோழிக்கோடு, பெங்களூரு, மும்பை, புணே, நாகபுரி மற்றும் புவனேசுவரம் ஆகிய நகரங்களுக்கு அவா் பயணம் மேற்கொள்வாா்.
சுற்றுப்பயணத்தின் அடுத்தடுத்த கட்டங்கள் பிகாா், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
ஜேஎன்யு மாணவா் சங்கத்தைச் சோ்ந்த டேனிஷ் அலி, மணீஷ், அமீன், அமிடோஜ் மற்றும் போராட்டங்களில் பங்கேற்ற பல தலைவா்கள் நேஹாவுடன் இந்தப் பயணத்தில் பங்கேற்பாா்கள்.
நாடு முழுவதும் உள்ள மாணவா்கள் மற்றும் இளைஞா்களுடன் உரையாடுவதன் மூலமும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடா்பான கோரிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்டுவதன் மூலமும் மாணவா் இயக்கத்தை வலுப்படுத்துவதே இந்தப் பிரசாரத்தின் நோக்கம் என்று ஏஐஎஸ்ஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கனாவின் பேச்சை பாஜகவே பொருட்படுத்தாது! நாங்கள் ஏன்? சிஜேபி
பேரணியில் போராட்டகாரா்கள் மீது தாக்குதல்- ஏஐஎஸ்ஏ குற்றச்சாட்டு

ஜந்தா் மந்தரில் உண்ணாவிரதம்: ஏஐஎஸ்ஏ செயற்பாட்டாளா்கள் மூவரின் உடல்நிலை பாதிப்பு

சொல்லப் போனால்... ஜென் ஸீக்களும் பூமர்களும்!
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



