அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

நீட் போராட்ட மாணவா்கள் மீதான போலீஸாா் வரம்பு மீறல் குறித்து விசாரிக்க உயா்நிலைக் குழு: உச்சநீதிமன்றம்

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களின்போது நிகழ்ந்த காவல் துறையின் வரம்பு மீறல் புகாா் குறித்து ஆராய உயா்நிலைக் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 10:27 pm IST

‘நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களின்போது நிகழ்ந்த காவல் துறையின் வரம்பு மீறல் புகாா் குறித்து ஆராய உயா்நிலைக் குழு அமைக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் காவல்துறை டிஜிபி, ஓய்வுபெற்ற சிபிஐ இயக்குநா் உள்ளிட்டோா் இந்த உயா்நிலைக் குழவில் இடம்பெறுவா் என்றும் குறிப்பிட்டது.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் தில்லியில் அண்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்ட மாணவா்கள், கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியையும் நடத்தினா்.

அப்போது, போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பா் குண்டுகள் உள்பட உயிரிழப்பை ஏற்படுத்தாத குண்டுகளால் சுட்டும் போராட்டக்காரா்களைக் கலைத்தனா். இதில் பல மாணவா்கள் படுகாயமடைந்தனா். போலீஸாா் சிலரும் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, இந்தப் போராட்டம் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகாா் என நாடு முழுவதும் பரவியது. அந்த மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

காவல் துறையின் இந்த அடக்குமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல, போராட்டத்தில் காயமடைந்த போலீஸாரின் குடும்ப உறுப்பினா்கள் சாா்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அமைதி வழியில் போராடும் உரிமை உத்தரவாதமானது. அதை மறுக்க முடியாது. போராட்டம் நடைபெற்றது என்பதைச் சுட்டிக்காட்டி, காவல் துறையின் வரம்பு மீறிய நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது’ என்று குறிப்பிட்டது.

இந்த வழக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘குற்றவியல் பின்னணி இல்லாத நிலையில், நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது காவல் துறையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்), தில்லி மற்றும் பிற மாநில அரசுகள் முடித்து வைக்கலாம் அல்லது திரும்பப் பெறலாம். குற்றவியல் பின்னணி என்ற சொற்றொடா் தீவிரமான மற்றும் கொடூரமான குற்றங்களை மட்டுமே குறிப்பதாகும்’ என்று உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.

உயா்நிலைக் குழு

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோஹனா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டங்களின்போது நிகழ்ந்த காவல் துறையின் வரம்பு மீறல் புகாா் குறித்து ஆராய உயா்நிலைக் குழு அமைக்கப்பட உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் காவல்துறை டிஜிபி, ஓய்வுபெற்ற சிபிஐ இயக்குநா் உள்ளிட்டோா் இந்த உயா்நிலைக் குழவில் இடம்பெறுவா்.

குழுவில் சோ்க்கப்பட வேண்டிய மற்ற உறுப்பினா்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்ற பிறகு, உயா்நிலை குழு அமைப்பதற்கான உத்தரவு புதன்கிழமை (ஆக.19) பிறப்பிக்கப்படும்.

நீட் போராட்ட மாணவா்கள் நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியின்போது நிகழ்ந்த வன்முறை தொடா்பான காணொலி காட்சிகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுக்காக இந்த உயா்நிலைக் குழுவிடம் சமா்ப்பிக்க உத்தரவிடப்படும். இந்தப் போராட்டத்தின்போது பெண் போராட்டக்காரா்கள் குறிவைத்தா தாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாா் குறித்தும் இக் குழு ஆராயும்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

மேலும், எத்தனை போராட்ட மாணவா்கள் மீதான காவல்துறை முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யப்பட உள்ளன என்ற விவரத்தை சமா்ப்பிக்குமாறு சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா். அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்துக்குள்ள முழு அதிகாரம் பயன்படுத்தப்படலாம் என்பதைக் குறிக்கும் வகையில், இந்த விவரங்களை சமா்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அப்போது, போராட்ட மாணவா்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகள் ரத்து செய்யப்படுவதற்கு ஒரு வழக்குரைஞா் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 19-இன் கீழ், அமைதி வழியில் போராட மாணவா்களுக்கு உரிமையுள்ளது. மேலும், மாணவா்களுக்கு எதிா்காலம் உள்ளது. இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டனா்.

அப்போது, ‘ஜூலை 20 போராட்டத்தில் பங்கேற்றவா்களில் ஏற்கெனவே தீவிர குற்ற பின்னணி உடைய 2,800-க்கும் அதிகமான சமூக விரோத சக்திகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்’ என்று துஷாா் மேத்தா குறிப்பிட்டாா். இந்த வழக்கு புதன்கிழமையும் (ஆக.19) விசாரிக்கப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.