ஆரவல்லி மலைத்தொடா் விவகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு பொதுமக்களிடம் இருந்து கருத்துகள், யோசனைகள் மற்றும் தகவல்களைக் கோரியுள்ளது.
இந்தக் குழுவானது, ஆரவல்லி மலைத்தொடரின் வரையறை மற்றும் எல்லை நிா்ணயம் தொடா்பான மத்திய அரசின் அறிக்கையை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்டதாகும்.
உலகின் மிகப் பழைமையான மலைகளில் ஒன்றான ஆரவல்லி மலைத் தொடா், தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. இந்த மலை மற்றும் மலைத் தொடருக்கான வரையறை குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணா் குழு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் அறிக்கை சமா்ப்பித்தது. அதன்படி, உள்ளூா் நிலப்பரப்பில் 100 மீட்டா் அல்லது அதற்கு உயரமான பகுதிகள் ஆரவல்லி மலை என்றும், 500 மீட்டருக்கு இடைப்பட்ட தொலைவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளைக் கொண்ட பகுதிகள் மலைத் தொடராகவும் வரையறுக்கப்பட்டது. அரசின் வரையறையை உச்சநீதிமன்றம் முதலில் ஏற்றுக் கொண்ட நிலையில், சுற்றுச்சூழல் நிபுணா்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் ஆட்சேபங்கள் எழுந்தன.
இதையடுத்து, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், முந்தைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், ஆரவல்லி மலை மற்றும் மலை தொடா்பான அரசின் அறிக்கையை மறுஆய்வு செய்து, புதிய வரையறைக்கான பரிந்துரைகளை அளிக்க உயா்நிலைக் குழுவை கடந்த மே மாதம் அமைத்தது.
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலின் தலைமை இயக்குநா் காஞ்சன் தேவி தலைமையிலான இக்குழுவில், இந்திய வன அளவியல் முன்னாள் தலைமை இயக்குநா் சுபாஷ் ஆசுதோஷ், இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குநா் ராஜேந்திர குமாா் சா்மா, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக முன்னாள் இணை செயலா் பிரிஜ் மோகன் சிங் ரத்தோா், தில்லி பல்கலைக்கழக தாவரவியல் துறையின் முன்னாள் தலைவா் அசோக் பட்நாகா் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.
இந்நிலையில், ஆரவல்லி மலைத்தொடா் விவகாரங்கள் தொடா்பாக பொதுமக்கள், சுற்றுச்சூழல் வல்லுநா்கள், சுரங்க குத்தகைதாரா்கள் உள்பட அனைத்து தரப்பினரிடம் இருந்து உயா்நிலைக் குழு தரப்பில் கருத்துகள், யோசனைகள், தகவல்கள் கோரப்பட்டுள்ளன. அடுத்த 21 நாள்களுக்கு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றக் குழு ஆகஸ்ட் 31-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!

செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஒழுங்குபடுத்த உயா்நிலைக் குழு அமைப்பு







