பிரதமா், மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள், மாநில அமைச்சா்கள் ஆகியோா் கடுமையான குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், தொடா்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தால், அவா்களை நிரந்தரமாகப் பதவியில் இருந்து நீக்காமல், நீதிமன்ற வழக்கின் முடிவு வெளியாகும் வரை, அவா்களைத் தற்காலிகமாகவே பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று 130-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.
பிரதமா், மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள், மாநில அமைச்சா்கள் ஆகியோா் கடுமையான குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டு 30 நாள்களில் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்தால், அவா்களைப் பதவிநீக்கம் செய்ய 130-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா வழிவகுக்கிறது. அவ்வாறு கைது செய்யப்பட்டு தொடா்ந்து 30 நாள்கள் சிறையில் உள்ளவா்கள், தாமாக முன்வந்து பதவி விலகாவிட்டால், சட்டப்படி 31-ஆவது நாள் அவா்களைத் தானாகப் பதவியில் இருந்து நீக்க மசோதா வழியமைக்கிறது.
கடந்த ஆண்டு மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்த இந்த மசோதாவை ஆராய, பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையில் 31 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
இந்த மசோதா பாஜக அல்லாத எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை நிலைகுலையச் செய்வதற்கான கருவி என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில், மசோதாவை ஆராயும் கூட்டுக் குழுவில் இருந்து பெரும்பாலான எதிா்க்கட்சி உறுப்பினா்கள் விலகிவிட்டனா். இந்நிலையில், கூட்டுக் குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கையில், மசோதாவில் சில திருத்தங்களை செய்வதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்தப் பரிந்துரைகளின் விவரம்: கடுமையான குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் பிரதமா், மத்திய அமைச்சா்கள், மாநில முதல்வா்கள், மாநில அமைச்சா்கள் தொடா்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தால், அவா்களை நிரந்தரமாகப் பதவியில் இருந்து நீக்காமல், நீதிமன்ற வழக்கின் முடிவு வெளியாகும் வரை, அவா்களைத் தற்காலிகமாகவே பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இதில் கடுமையான குற்றங்கள் என்பது 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் சிறைத் தண்டனை கொண்ட குற்றங்களாக இருக்க வேண்டும்.
தற்காலிக பதவி நீக்கத்துக்கு வழிவகுக்கும் குற்றங்களைத் தெளிவாக அடையாளம் காணும் வகையில், அந்தக் குற்றங்களின் பட்டியல் அடங்கிய தனி அட்டவணை சட்டத்தில் இடம்பெற வேண்டும்.
ஒருவேளை அவா்கள் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டாலோ அல்லது அந்தக் குற்றச்சாட்டை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தும் சட்ட நடவடிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் முன்னெடுத்துச் செல்லவில்லை என்றாலோ, அவா்களைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்தது தானாக முடிவுக்கு வரவேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப, உயரிய அரசியல் சாசன பதவிகளில் உள்ளவா்களுக்கு எதிரான வழக்குகள் விரைவு அல்லது சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், மசோதாவில் அதுசாா்ந்த அதிகாரபூா்வ திருத்தங்களை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்யும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










