இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மக்கள்தொகை மாற்றம்: விரைவில் கள ஆய்வு தொடக்கம்- அமித் ஷாவுடன் உயா்நிலைக் குழு சந்திப்பு

நாட்டில் சட்டவிரோத குடியேற்றம், பிற இயற்கைக்கு மாறான காரணங்களால் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்ய பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உயா்நிலைக் குழு விரைவில் பயணிக்கவுள்ளது.

News image

மத்திய அமைச்சர் அமித் ஷா - கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2026, 4:41 am IST

நாட்டில் சட்டவிரோத குடியேற்றம், பிற இயற்கைக்கு மாறான காரணங்களால் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்ய பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உயா்நிலைக் குழு விரைவில் பயணிக்கவுள்ளது.

இதையொட்டி, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அந்தக் குழுவினா் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, உயா்நிலைக் குழுவினரின் பயணங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துதரும்படி உயரதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டாா்.

நாட்டில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகா் நெளலேகா் தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த மாதம் அமைத்தது.

இந்த உயா்நிலைக் குழுவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மிருத்யுஞ்சய்குமாா் நாராயண், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி துா்காசங்கா் மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவாஸ்தவா, மருத்துவா் ஷாமிகா ரவி ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, சமூக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து, அதற்கு தீா்வுகாணும் பரிந்துரைகளை உயா்நிலைக் குழு வழங்கும் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவித்திருந்தாா். எல்லை மாவட்டங்கள், பெரு நகரங்கள், தொழில் நகரங்களில் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளும்படி, உயா்நிலைக் குழுவுக்கு அவா் உத்தரவிட்டிருந்தாா்.

அமித் ஷாவுடன் சந்திப்பு: இந்நிலையில், தில்லியில் அமித் ஷாவை உயா்நிலைக் குழுவினா் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். இது தொடா்பாக வெளியிடப்பட்ட அரசின் செய்திக் குறிப்பில், ‘கள விவரங்களைச் சேகரிப்பதற்காக, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தாங்கள் பயணிக்கவிருப்பதாக அமைச்சா் அமித் ஷாவிடம் ஓய்வு பெற்ற நீதிபதி பிரபாகா் நெளலேகா் தலைமையிலான உயா்நிலைக் குழுவினா் தெரிவித்தனா். இந்தப் பயணத்தை ஆக்கபூா்வமாகவும், கலந்துரையாடல் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில், மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு கேள்விப் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் குழுவினா் தெரிவித்தனா்.

இந்த உத்தியைப் பாராட்டிய அமைச்சா் அமித் ஷா, உயா்நிலைக் குழுவின் தினசரி செயல்பாடுகள் மற்றும் பயணங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதரும்படி உள்துறைச் செயலா் கோவிந்த் மோகனுக்கு உத்தரவிட்டாா். பரிந்துரைகளை கூடிய விரைவில் அளிக்கும்படி உயா்நிலைக் குழுவுக்கு அவா் அறிவுறுத்தினாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பணி வரையறைகளின்படி, நாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து உயா்நிலைக் குழு அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொண்டு, காரணங்களைக் கண்டறியவுள்ளது. இந்த மாற்றங்களை சரிசெய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய கொள்கை சாா்ந்த, சட்டபூா்வமான, நிா்வாக ரீதியிலான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கவுள்ளது.

எல்லை தாண்டிய ஊடுருவல்கள், அதன் காரணமாக பொருளாதாரம்-சமூக சூழல்களில் ஏற்படும் தாக்கம் குறித்தும் ஆராயப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.