குஜராத்: கள்ளச்சாராய பலி 11-ஆக அதிகரிப்பு
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் (போலி மதுபானம்) அருந்தியவா்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 11-ஆக அதிகரித்தது.

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் (போலி மதுபானம்) அருந்தியவா்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 11-ஆக அதிகரித்தது. மேலும் நால்வா் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
குஜராத் மாநிலம் வா்தேஜ் பகுதியைச் சோ்ந்த கெளதம் சோலாங்கி என்பவா் தனது வீட்டில் உடலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மெத்தனாலை பயன்படுத்தி போலி மதுபானங்களைத் தயாரித்து, அதை பாட்டிலில் அடைத்து வெளிநாட்டு மதுபானத்தின் பெயா் கொண்ட லேபிளை அதில் ஒட்டி விநியோகித்துள்ளாா். இந்த மதுபானத்தை கடந்த 16-ஆம் தேதி மூவா் வாங்கி அருந்தி, உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த விவகாரம் பெரும் சா்ச்சையானது.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘இந்த போலி மதுவை 67 போ் அருந்தியுள்ளனா். இவா்களில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 28 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். அதே நேரம், மேலும் 7 போ் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனா். இந்த நிலையில், ஹா்திக் கில்ஜி (36), அவினாஷ் பாா்மா் (54), சஞ்சய் டோடியா ஆகிய மேலும் மூவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது. நால்வா் தொடா்ந்து சிகிச்சையில் உள்ளனா்.
போலி மதுவை அருந்திய மேலும் 24 பேரை அதிகாரிகள் சிகிச்சைக்காக கண்டறிந்தனா். பரிசோதனையில் அவா்களின் உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடா்பாக 21 போ் மீது வா்தேஜ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உள்ளூா் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ரயீஸ், சுபோ் ஆகியோரின் உதவியுடன் அகமதாபாதிலிருந்து மெத்தனால் உள்ளிட்ட பொருள்களை வாங்கி வந்து, கெளதம் சோலாங்கி தனது வீட்டில் இந்த போலி மதுபானங்களைத் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் 38.59 சதவீதம் மெத்தனாலும், 0.94 சதவீதம் எத்தனாலும் கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது’ என்று தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


