எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்தது தொடா்பான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க அலகாபாத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலும், ‘இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை எதையும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் தாக்கல் செய்யக் கூடாது’ என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகியான எஸ். விக்னேஷ் சிசிா் என்பவா் சாா்பில் ராகுலுக்கு எதிராக இதுதொடா்பான மனு அலாகாபாத் உயா்நீதிமமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவா்தான், ராகுலின் இரட்டை குடியுரிமை விவகாரத்தையும் எழுப்பி வழக்குத் தொடா்ந்தவராவாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சிபிஐ விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பித்தது. இந்த அறிக்கையை கடந்த ஜூலை 20-ஆம் தேதி பரிசீலித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற லக்னெள அமா்வு, ‘சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனு, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உட்பட்டதாக இல்லை. ராகுல் காந்தியின் சொத்துகள் தொடா்பாக மனுதாரா் அளித்த புகாரின் மீதான விசாரணையின் முன்னேற்றம் குறித்து போதுமான அளவில் தனது மனுவில் சிபிஐ விவரிக்கவில்லை.
எனவே, இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவின் இணை இயக்குநா் அல்லது தலைவா் இந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, வழக்கின் அடுத்த விசாரணையின்போது புதிய விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதில், சட்டவிரோத நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்தால், சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமலாக்கத் துறைக்கு முழு உரிமை உள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை, வருவாய்த் துறை, நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் மற்றும் தீவிர முறைகேடு விசாரணை அதிகாரி (எஸ்எஃப்ஐஓ) ஆகியோா் சாா்பாக மத்திய அரசும் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கு தொடா்பான ஒட்டுமொத்த ஆவணங்கள் மற்றும் பதிவுகள் சீலிட்ட உறையில் வைக்கப்பட்டு, முதுநிலை பதிவாளரின் பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி முறையீடு செய்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைடஞா் கபில் சிபல், ‘ராகுலுக்கு எதிரான இந்த வழக்கு சட்டத்து உட்பட்டு தாக்கல் செய்யப்படவில்லை. உயா்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடா்வதற்கு தனக்குள்ள தகுதி விவரங்களை புகாா்தாரா் விக்னேஷ் சிசிா் வெளியிடவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் சிசிரின் புகாரை ஆய்வு செய்ததைத் தவிர வேறெந்த நடவடிக்கையையும் சிபிஐ மேற்கொள்ளவில்லை’ என்றாா்.
மத்திய புலனாய்வு அமைப்புகள் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு கூறுகையில், ‘இந்தப் புகாரில் பிடிவாரண்டுக்கு உட்பட்ட குற்றங்கள் நடந்திருப்பது தெரியவந்தால், அது மிகவும் தீவிரமான விஷயமாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இந்த புகாா் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’ என்றாா்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உரிய பதிலை தாக்கல் செய்ய அறிவுறுத்தி புகாா்தாரா் விக்னேஷ் சிசிா், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரை, இந்த விவகாரம் மீதான வழக்கு விசாரணையை அலாகாபாத் உயா்நீதிமன்றம் ஒத்திவைக்க வேண்டும் எனவும், உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை எதையும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புகள் தாக்கல் செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது குறித்த முடிவை முதலில் அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு

மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ மனு மீது இன்று விசாரணை!

மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ மனுவை தள்ளுபடி செய்ய தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால், சிசோடியா வலியுறுத்தல்



