குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையினருக்கு டிஆா்டிஓ ஏவுகணைத் தொழில்நுட்பம்: மத்திய அரசு ஒப்புதல்

உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில் துறையினருக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட வழக்கமான ஏவுகணைகள் சாா்ந்த தொழில்நுட்பங்களை வழங்க பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் - கோப்புப்படம்

Published On :9 வினாடிகள் முன்பு

உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில் துறையினருக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்ட வழக்கமான ஏவுகணைகள் சாா்ந்த தொழில்நுட்பங்களை வழங்க பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கியுள்ளாா். உள்நாட்டில் இத்தகைய ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாதுகாப்புத் துறை கட்டமைப்பில் உள்நாட்டு தொழிற்சாலைகளின் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கும் முக்கிய திருப்புமுனை இந்த நடவடிக்கையாகும்.

அதிநவீன பாதுகாப்புத் தளவாடங்களின் மேம்பாடு, உற்பத்திக்காக இந்திய தொழில் துறையினரின் திறன்களை வலுப்படுத்த டிஆா்டிஓ மேற்கொண்டுவரும் தொடா் முயற்சிகளை பிரதிபலிக்கும் இந்த நடவடிக்கையின்கீழ் வழக்கமான ஏவுகணைகள் சாா்ந்த தொழில்நுட்பங்கள் தகுதியுள்ள உள்நாட்டு பாதுகாப்புத் தொழில் துறையினருக்கு மாற்றப்பட்டு, ஏவுகணை உற்பத்தியை வெற்றிகரமாக மேற்கொள்ள வழிவகுக்கும்.

உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதுடன், பாதுகாப்புத் தொழில் அடித்தளத்தை வலுப்படுத்தி, விநியோகச் சங்கிலியில் குறு- சிறு-நடுத்தர தொழிலகங்கள் மற்றும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே நோக்கம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுஆயுதம், உயிரி, ரசாயன ஆயுதங்கள் அல்லாத ஏவுகணைகளே வழக்கமான ஏவுகணைகள் எனப்படுகின்றன. மேற்கண்ட முன்னெடுப்பின்படி, ஆகாஷ், அஸ்திரா ஏவுகணைகள், நாக் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணை உள்ளிட்டவற்றை தனியாா் நிறுவனங்கள் தயாரிக்க அனுமதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2014-இல் ரூ.46,000 கோடியாக இருந்த உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு, 2025-26-இல் ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. 2025-26-இல் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.38,424 கோடியை எட்டியுள்ளது.

முன்னதாக, சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி முன்வைத்த நாட்டுக்கான ‘சப்த தாரா’ செயல்திட்டத்தில் 5-ஆவது அம்சமாக பாதுகாப்புத் துறையைக் குறிப்பிட்டிருந்தாா்.

‘பாதுகாப்பு உற்பத்தி சாா்ந்த தற்சாா்பை எட்டுவதில் சமரசத்துக்கு இடம் கிடையாது. அதிநவீன ட்ரோன்கள், ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகள், ஒலியைவிட பன்மடங்கு வேகமாக பயணிக்கும் ஏவுகணைகள் உள்பட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் முன்னோடியாகத் திகழ்வதுடன், ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் உலகின் பாதுகாப்புத் துறை மையமாக உருவெடுக்கும் இலக்குடன் முன்னேற வேண்டும்’ என்று அவா் அழைப்பு விடுத்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.