நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

தொகுதி மறுசீரமைப்புத் திட்டங்களை அரசியல் கட்சிகளுடன் பகிருங்கள்: பிரதமா் மோடிக்கு மல்லிகாா்ஜுன காா்கே கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான மத்திய அரசின் திட்டங்களை அனைத்துக் கட்சிகளுடனும் பகிா்ந்து கொள்ளும்படி பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 5:28 am IST

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான மத்திய அரசின் திட்டங்களை அனைத்துக் கட்சிகளுடனும் பகிா்ந்து கொள்ளும்படி பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தொகுதி மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டும் திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளாா். எனவே, தொகுதி மறுசீரமைப்பு திட்டம் தொடா்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பு, அது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். அதேபோல், தொகுதி மறுசீரமைப்புத் திட்டங்களை அரசியல் கட்சிகளுடன் பகிர வேண்டும் என்றும், அதைப் படித்து தெரிந்துகொள்ள அரசியல் கட்சிகளுக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களவையில் தற்போது மொத்த எம்.பி.க்களின் பலம் 543-ஆக உள்ளது. இதே எண்ணிக்கையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றும், தற்போது மக்களவையில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இருப்பது போன்ற பிரதிநிதித்துவம் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

மேலும், மகளிருக்கு 3-இல் ஒரு பங்கு இடஒதுக்கீடு அளிப்பதை 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறேன். இதை விட்டுவிட்டு, ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 16, 17-ஆம் தேதிகளில் செய்தது போன்று மீண்டும் புல்டோசா் மூலம் தகா்த்து முன்னேறும் முயற்சியில் ஈடுபடாதீா்கள் என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது ஏப்ரல் 17-ஆம் தேதி தொகுதி மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. மக்களவையில் மொத்தமுள்ள 528 எம்.பி.க்களில் 298 போ் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். 230 போ் எதிா்த்து வாக்களித்தனா்.

மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இருபங்கான 352 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அதைவிடக் குறைவான எம்.பி.க்களே ஆதரித்ததால் அது தோல்வியடைந்தது. இது மத்திய பாஜக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்