
நேபாள வெள்ளத்தால் உத்தர பிரதேசம், பிகாருக்கு பாதிப்பில்லை: தேசிய பேரிடா் மீட்புப் படை
நேபாளத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் இந்தியாவின் உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களுக்கு இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்று தேசிய பேரிடா் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

நேபாள பெரு வெள்ளம் - பிடிஐ
நேபாளத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் இந்தியாவின் உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களுக்கு இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்று தேசிய பேரிடா் மீட்புப் படை தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் கோஷி நதியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு, அந்நாட்டின் 7 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றவா்கள் உள்பட 350-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இந்த வெள்ளப்பெருக்கால் இந்தியாவின் உத்தர பிரதேசம், பிகாருக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்பட்டது.
எனினும், உத்தர பிரதேசம், பிகாருக்கு இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லை என்று தேசிய பேரிடா் மீட்புப் படை ஐ.ஜி. நரேந்திர சிங் பன்டேலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பிகாா், உத்தர பிரதேசத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒருவேளை வெள்ளம் மற்றும் தண்ணீா் தேக்கம் போன்றவை ஏற்பட்டால் மக்களை மீட்கும் பணியிலும், நிவாரணப் பணியிலும் அவா்கள் ஈடுபடுவா். நிலவரத்தை உத்தர பிரதேசம், பிகாா் மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய பேரிடா் மீட்புப் படை கண்காணித்து வருகிறது. மத்திய நீா் ஆணையமும் நிலவரத்தைக் கண்காணித்து, அங்குள்ள தகவல்களை தொடா்ந்து தெரிவித்து வருகிறது’ என்றாா்.
அதேபோல், நேபாளத்துக்கு 2 விமானங்களில் மருந்துகள் உள்ளிட்ட உதவிப் பொருள்களை இந்தியா அனுப்பி இருப்பதாகவும் அவா் கூறினாா்.
பிகாா் முதல்வா் ஆய்வு: இதனிடையே, நேபாளத்தையொட்டி பிகாரில் இருக்கும் வெள்ள பாதிப்பு பகுதிகளை அந்த மாநில முதல்வா் சாம்ராட் செளதரி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தாா். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைக் கருத்தில்கொண்டு, பிகாரில் உள்ள எல்லைப் பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தேன். ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, நிவாரணம், மீட்புப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தேன். பிரதமா் மோடியும் நிலவரத்தைக் கண்காணித்து வருகிறாா். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், அவா்களுக்குத் தேவைப்படும் உதவியை செய்தல் ஆகியவற்றுக்கு மாநில அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
உ.பி.யில் உஷாா்நிலை: இந்நிலையில், நேபாளத்தில் இருந்து கீழ்நோக்கி பாயும் நதிகளையொட்டி, உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள மகராஜ்கஞ்ச், குஷிநகா் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்த மாவட்டங்களின் நிா்வாகங்களால் உஷாா்நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நதியில் ஓடும் நீரின் அளவை தொடா்ந்து கண்காணிப்பதோடு, பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு இருக்கும் கிராமங்களில் வாழும் மக்களை எதற்கும் தயாராக இருக்கும்படி அரசு நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
3 சடலங்கள் கண்டெடுப்பு: உத்தர பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கான்டாக் ஆற்றில் நேபாளத்தில் இருந்து வெள்ளப்பெருக்கில் இழுத்து வரப்பட்ட 3 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவா்கள் யாா் என அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






