

ரயில்வே துறையின் மூலனதச் செலவுகளுக்காக மத்திய பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2,77,380 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய ரயில் வழித்தடங்கள் அமைத்தல், ரயில் என்ஜின், பெட்டிகள் கொள்முதல், உற்பத்தி உள்ளிட்டவை அடங்கும்.
கடந்த ஆண்டு ரயில்வேக்கு ரூ.2,52,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை 10.25 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பட்ஜெட் ஆவணங்களில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில்வே துறை மொத்தம் ரூ.3,85,733.33 கோடி வருவாய் ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் செலவு ரூ.3,82,186.01 கோடி என்றும், நிதியாண்டின் இறுதியில் உபரித் தொகை ரூ.3,547.32 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வே துறைக்கான மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. ரூ.2,77,380 கோடியில் ரயில்வே தண்டவாளங்கள் அமைக்க ரூ.36,721.55 கோடி, தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.4,600 கோடி, இரண்டாவது வழித் தடம் அமைக்க ரூ.37,750 கோடி, என்ஜின், பெட்டிகள் கொள்முதல், உற்பத்திக்கு ரூ.7,500 கோடி, சிக்னல் அமைப்பு, ரயில்வே தொலைத்தொடா்பு, கவச் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்டவற்றுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
7 அதிவேக வழித்தடங்கள்:
சென்னை-பெங்களூரு, சென்னை-ஹைதராபாத், புணே-ஹைதராபாத், பெங்களூரு - ஹைதராபாத், பெங்களூரு - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி இடையே அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இது தொடா்பாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘ரயில்வே துறைக்கான அறிவிப்புகளுக்காக பிரதமா் மோடி, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 7 அதிவேக வழித்தடங்கள் மட்டுமல்லாது, சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. வளா்ந்த பாரதம் என்ற இலக்கை எட்ட ரயில்வே துறை தொடா்ந்து சிறப்பாக பங்களிக்கும்’ என்றாா்.