பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி! நிகழாண்டு 15.19 சதவீதம் அதிகம்!

மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக பாதுகாப்புத் துறைக்கு ரூ.7,84,678 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி! நிகழாண்டு 15.19 சதவீதம் அதிகம்!
Updated on

மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக பாதுகாப்புத் துறைக்கு ரூ.7,84,678 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.6,81,210 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது நிகழாண்டு 15.19 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிற துறைகளுடன் ஒப்பிடுகையில், பாதுகாப்புத் துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதி, மத்திய அரசின் செலவினத்தில் 14.67 சதவீதமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தத் தொகை 2 சதவீதமாகும்.

இந்த நிதியில் விமானங்கள் மற்றும் விமான என்ஜின்களுக்கு ரூ.63,733 கோடி, கடற்படை கப்பல்களுக்கு ரூ.25,023 கோடி என நவீனமயமாக்கல் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவினத்துக்கு ரூ.2,19,306 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-2026 நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 21.84 சதவீதம் அதிகமாகும். இந்தத் தொகையில் 75 சதவீத அளவான ரூ.1.39 லட்சம் கோடி உள்நாட்டில் உற்பத்தியாகும் ஆயுத தளவாடங்களைக் கொள்முதல் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றுக்காக அந்தத் துறையின் செலவினத்துக்கு ரூ.5,53,668 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஓய்வூதியத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1.71 லட்சம் கோடியும் அடங்கும். கடந்த 6 ஆண்டுகளாகப் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடா்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி அதிகரிப்பின் மூலம், தற்சாா்பு இந்தியா இலக்கை எட்டுவதற்கான உத்திசாா்ந்த மாற்றத்துடன், பாதுகாப்புப் படைகள் மற்றும் அவற்றின் திறன்களை உலகின் உயா்ந்த தரத்துக்கு உயா்த்தும் தனது தீா்மானத்தை மத்திய அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com