ராகுல் கையெழுத்திடவில்லை! ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுமா?

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்கள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் பற்றி..
LoP Rahul Gandhi did not sign the No-confidence notice move against Om Birla
ஓம் பிர்லா | ராகுல் காந்திகோப்புப் படம்
Updated on
2 min read

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுமா?

எனினும், இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பிப். 1 ஆம் தேதி 2026 -27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அப்போது சீன ஆக்கிரமிப்பு விவகாரம் குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவணே எழுதிய புத்தகத்தில் இருந்தவற்றைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் பேசத் தொடங்கியபோது, அவையில் எதிர்ப்பு கிளம்பியது. அவைத் தலைவரும் ராகுல் காந்தியை தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ராகுல், 'பிரதமர் மோடி அவைக்கு வந்தால் முன்னாள் ராணுவ தளபதி நரவணே எழுதிய புத்தகத்தை அளிப்பேன்' என்று கூறியிருந்தார். ஆனால் பிப். 4 ஆம் தேதி இந்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை. பிரதமர் உரை இல்லாமலே மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறுநாள்(பிப். 5) மாநிலங்களவையில் பிரதமர் உரையாற்றிய நிலையில் கடும் அமளி ஏற்பட்டு அதற்கிடையே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அவைத்தலைவர் ஓம் பிர்லா 'பிரதமரை நான்தான் மக்களவைக்கு வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்' என்று தெரிவித்தார். பெண் எம்.பி.க்கள் குறித்து கருத்து தெரிவித்ததால் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நீக்கக் கோரி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று(பிப். 10) மக்களவை செயலரிடம் வழங்கியுள்ளனர். இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படாதது, 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மீதான அவதூறு, அவைத் தலைவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவது ஆகியவற்றுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விதிகளின்படி இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை செயலர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக வழங்கிய நோட்டீஸில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவைத் தலைவரை நீக்கக் கோரும் நோட்டீஸில் எதிர்க்கட்சித் தலைவர் கையெழுத்திடுவது நாடாளுமன்ற ஜனநாயக முறைப்படி சரியானது அல்ல என்று காங்கிரஸ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸில் கையெழுத்திடவில்லை. முதலில் அவைத் தலைவரிடம் ஒரு புகார் மனு அளித்து அதில் அவர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தீர்மானத்திற்கு ஆதரவு தருவோம் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.

ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்வதாகவும் மக்களின் பொதுவான பிரச்னைகளை அவையில் எழுப்ப அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீர்மான நோட்டீஸில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அரசியலமைப்பின் 94(c) பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, பிப். 4 அன்று பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்த விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள், பிரதமரின் இருக்கைக்கு அருகே கையில் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

மேலும் அவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் குறித்து அமைச்சர் கிரண் ரிஜுஜு, "எதிர்க்கட்சியின் நடவடிக்கையை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டு விட்டது. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சியிடம் போதுமான எம்.பி.க்கள் இல்லை. எனினும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சீர்குலைக்கின்றன. அவைக்கு எதிராக செயல்படுகின்றன" என்று குற்றம் சாட்டினார்.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 94(c)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்மானம் அளித்த 14 நாள்களுக்குப் பிறகு அவையில் கொண்டுவரப்படலாம். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடக்கும்போது அவையில் உள்ள எம்.பி.க்களின் 50%க்கு அதிகமான ஆதரவு தேவை. அவ்வாறு பாதிக்கும் மேலான எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவைத்தலைவர் மாற்றப்பட வாய்ப்புள்ளது.

ஆனால், பாஜக கூறியதுபோல எதிர்கட்சியினருக்கு போதுமான எம்.பி.க்கள் பலம் இல்லாததால் அவைத் தலைவருக்கு எதிரான இந்த நம்பிக்கையிலா தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக 1954ல் ஜி.வி. மவலங்கர், 1966ல் சர்தார் ஹுகம் சிங், 1987ல் பலராம் ஜாகர் ஆகியோருக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் தீர்மானங்கள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

LoP Rahul Gandhi did not sign the No-confidence notice move against Om Birla

LoP Rahul Gandhi did not sign the No-confidence notice move against Om Birla
ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது காங்கிரஸ்!
LoP Rahul Gandhi did not sign the No-confidence notice move against Om Birla
பிப். 4 அன்று மக்களவையில் நடந்தது என்ன? விடியோ வெளியிட்ட கிரண் ரிஜுஜு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com