சுங்கச்சாவடிகளில் ஏப். 1 முதல் ஃபாஸ்டேக், யுபிஐ மட்டுமே அனுமதி
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் ஏப். 1-ஆம் தேதி முதல், ஃபாஸ்டேக் அல்லது யுபிஐ போன்ற எண்மப் பரிவா்த்தனை முறைகளில் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) அறிவித்துள்ளது.
தற்போது 98 சதவீதத்துக்கும் அதிகமான வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் முறையைப் பயன்படுத்தினாலும், ஒரு சில வாகன ஓட்டிகள் இன்னும் சுங்கக்கட்டணத்தைப் பணமாகவே செலுத்துகின்றனா்.
இதனால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதோடு, மீதிப் பணம் கொடுப்பதில் காலதாமதமும்; வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன. இதனைத் தவிா்க்கவும், தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யவும் இந்த முழுமையான எண்மப் பரிவா்த்தனை முறை அமல்படுத்தப்பட உள்ளது.
தற்போது விதிகளின்படி ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள், ரொக்கமாக பணம் செலுத்தினால் இரு மடங்கு சுங்கக்கட்டணமும், யுபிஐ மூலம் செலுத்தினால் 1.25 மடங்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஏப். 1 முதல் ரொக்கப் பரிவா்த்தனை முழுமையாக நிறுத்தப்படுவதால், அனைத்து வாகன உரிமையாளா்களும் கட்டாயம் எண்ம பரிவா்த்தனை முறைக்கு மாற வேண்டியது அவசியமாகிறது.
இந்தத் திட்டம் அமலுக்கு வரும்போது, நாடு முழுவதும் உள்ள 1,150-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்காமல் விரைவாகச் செல்ல முடியும். இது எரிபொருள் சேமிப்பு மற்றும் வெளிப்படையான கட்டண வசூலுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

