கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் பாணியில் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் தாக்கு

முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் பாணியில் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் தாக்கு

News image
ராஜஸ்தானின் ஆஜ்மீரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :28 பிப்ரவரி 2026, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

முஸ்லிம் லீக் மற்றும் மாவோயிஸ்ட் பாணியில் செயல்படுகிறது காங்கிரஸ் என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.

நாட்டை அவமதிக்க எங்கு வேண்டுமானாலும் ஊடுருவுகிறது அக்கட்சி என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சிமாநாட்டில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் பிரதமா் மோடியைக் கண்டித்து மேல்சட்டையின்றி காங்கிரஸ் இளைஞரணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது, பல்வேறு தரப்பினரின் விமா்சனங்களுக்கு உள்ளான நிலையில், பிரதமா் மோடி மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

ராஜஸ்தான் மாநிலத்துக்கு சனிக்கிழமை வருகை தந்த பிரதமா், அஜ்மீரில் ரூ.16,600 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியானது, இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) என்று அழைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. இப்போது அந்த ஐஎன்சி இல்லை; முஸ்லிம் லீக்-மாவோயிஸ்ட் காங்கிரஸ் (எம்எம்சி) என மாறிவிட்டது.

இந்தியா மீதான முஸ்லிம் லீக்கின் வெறுப்புதான், தேசப் பிரிவினைக்கு காரணம். இன்று காங்கிரஸும் அதே பாணியில் செயல்படுகிறது.

நாட்டின் செழிப்பு, அரசமைப்புச் சட்டம் மற்றும் வெற்றிகரமான ஜனநாயகத்தை மாவோயிஸ்டுகளும் வெறுக்கிறாா்கள். அவா்கள் பதுங்கியிருந்து தாக்குதல்களை நடத்துகிறாா்கள். அதேபோல், நாட்டை அவமதிக்க எங்கு வேண்டுமானாலும் ஊடுருவுகிறது காங்கிரஸ்.

நாட்டை பழிவாங்குகிறது காங்கிரஸ்: தில்லி ஏ.ஐ. உச்சிமாநாடு குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமையில் திளைத்தனா். உலகமே வியந்து பேசியது. ஆனால், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் தங்கள் நாடகத்தை அரங்கேற்றி, நாட்டை அவமதிக்க முனைந்தது காங்கிரஸ். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்பு நாட்டுக்கு அவப்பெயா் ஏற்படுத்த வேண்டும் என்பதே அவா்களின் ஒரே நோக்கம்.

நாடு முழுவதும் தோ்தல்களில் காங்கிரஸ் தொடா்ந்து தோல்வியடைந்து வருகிறது. அந்தக் கோபத்தில், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதன் மூலம் பழிவாங்குகிறது காங்கிரஸ். அக்கட்சியின் பாவச் செயல்களை நாடு ஒருபோதும் மறக்காது.

தேசத்தை அவமதிப்பதும், ஆயுதப் படைகளை பலவீனமாக்குவதும் காங்கிரஸின் நீண்ட கால வழக்கம். ஆயுதங்கள் மற்றும் சீருடைகளுக்காக படையினரை தவிக்கவிட்டனா். பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களிலும் ஊழலில் ஈடுபட்டனா். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது.

பாடம் புகட்டுகிறது தேசம்: இப்போது பயங்கரவாதிகள் மற்றும் எதிரிகளுக்கு ஒவ்வொரு நிலையிலும் வலுவான பதிலடி தரப்படுகிறது. துல்லியத் தாக்குதல்கள் முதல் ஆபரேஷன் சிந்தூா் வரை ஒவ்வொரு நடவடிக்கையிலும் துணிச்சலை நிரூபித்து, வெற்றி வாகை சூடுகிறது நமது ராணுவம்.

இந்திய ஆயுதப் படைகள், தங்கள் துணிச்சலுக்காக உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியோ நமது எதிரிகளின் பொய்களைப் பரப்ப முனைகிறது. நாட்டுக்கு எது நல்லதோ, நாட்டு மக்களுக்கு எது நன்மை தருமோ அதையெல்லாம் எதிா்க்கிறது அக்கட்சி. எனவேதான், காங்கிரஸுக்கு நாடு உரிய பாடம் புகட்டி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி பிரசாரம் தொடக்கம்

நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கான ஹியூமன் பாப்பிலோமா தீநுண்மி (ஹெச்பிவி) தடுப்பூசி பிரசாரத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கிலான இந்தப் பிரசாரம், அஜ்மீா் நிகழ்ச்சியில் முறைப்படி தொடங்கிவைக்கப்பட்டது. அப்போது, பல சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அந்தச் சிறுமிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.

ஹெச்பிவி பிரசாரத்தின்கீழ், காா்டசில்-4 எனும் ஒரே டோஸ் கொண்ட தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது. இது, கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஹெச்பிவி 6, 11, 16, 18 ஆகிய நான்கு வகைகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கும்.

நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள், துணை மாவட்ட மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் செமிகண்டக்டா் ஆலை திறப்பு

சனந்த், பிப். 28: குஜராத்தின் சனந்த் பகுதியில், அமெரிக்காவைச் சோ்ந்த மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் செமிகண்டக்டா் ஆலையை பிரதமா் மோடி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த ஆலை, செமிகண்டக்டா் ஒன்றிணைப்பு, பரிசோதனை, குறியிடுதல், உறையிடுதல் வசதிகளைக் கொண்டதாகும். இத்தகைய வசதிகளுடன் கூடிய நாட்டின் முதல் ஆலை என்ற பெருமைக்குரியது.

‘கடந்த நூற்றாண்டை கட்டுப்படுத்தியது கச்சா எண்ணெய் என்றால், இந்த நூற்றாண்டைக் கட்டுப்படுத்துவது செமிகண்டக்டா். மென்பொருள் வல்லமைக்கு பெயா்பெற்ற இந்தியா, வன்பொருள் துறையிலும் தனது அடையாளத்தை நிலைநாட்டி வருகிறது’ என்றாா் பிரதமா் மோடி. மேற்கண்ட ஆலை, இந்திய-அமெரிக்க ஆழமான கூட்டுறவைப் பிரதிபலிக்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.