

கடந்த ஆண்டு பிகார் மற்றும் தில்லி சட்டப் பேரவைத் தேர்தல்களில் மோசமான தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு 2026-ஆம் ஆண்டில் கேரளம் மறுமலர்ச்சியைத் தருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆண்டு மோசமான தோல்விகளைச் சந்தித்த ஆண்டாக அமைந்தது. தில்லி சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை. தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து அங்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி மலர்ந்தது.
இதைத் தொடர்ந்து பிகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது. அந்த மாநிலத்தில் அக்கட்சி போட்டியிட்ட 50 இடங்களில் வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வைப்புத்தொகையை இழந்தது. பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தலா 5 இடங்களில் வென்ற அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி மற்றும் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி ஆகியவற்றை விட ஓரிடத்தில் மட்டுமே காங்கிரஸ் கூடுதலாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கணிசமான வெற்றி பெற்றது அக்கட்சியினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2026-ஆம் ஆண்டில் காங்கிரஸுக்கு கேரளம் மறுமலர்ச்சியைத் தருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு ஆண்டில் கேரளத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான முன்னோட்டம்தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று இந்த ஆண்டு அஸ்ஸாமில் நடைபெற உள்ள தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது. அந்த மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
தேர்தல்கள் ஒருபுறம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. கட்சியை அடிமட்ட நிலையில் வலுப்படுத்த வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வெளிப்படையாகவே வலியுறுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் அண்மையில் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பாராட்டி கருத்து தெரிவித்தார். அர்ப்பணிப்பு மிகுந்த தொண்டர்களைக் கொண்ட அமைப்பு ஆர்எஸ்எஸ் என்று தெரிவித்த அவர், அதேபோன்று காங்கிரஸ் கட்சியையும் கட்டமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், 2026-இல் சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள கேரளத்தில் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவியைக் கைப்பற்ற பல தலைவர்களும் முயற்சித்து வருகின்றனர். அவர்களில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவாளரான கே.சி.வேணுகோபால் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார். கேரளத்தில் பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் இந்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சிப் பூசல் தொடர்ந்தது. கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே பனிப்போர் நீடிக்கிறது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து கடந்த நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவு பெற்றது. தற்போது டி.கே.சிவகுமாரை கர்நாடக முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களின் கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.