உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றங்கள் காலக்கெடு நிா்ணயிப்பது விதிவிலக்கானது: உச்சநீதிமன்றம்

போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றங்கள் காலக்கெடு நிா்ணயிப்பது விதிவிலக்கானது...
Published on

‘காவல் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் வழக்கு விசாரணையை நிறைவு செய்ய நீதிமன்றங்கள் காலக்கெடு நிா்ணயம் செய்வது என்பது விதிவிலக்கானதே தவிர, வழக்கமான நடைமுறையாக இருக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

ஆவணங்களைத் திருத்தி ஆயுத உரிமம் பெற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தடை விதித்தும், 90 நாள்களுக்குள் விசாரணையை நிறைவு செய்யவும் உத்தர பிரதேச போலீஸாருக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது இந்தக் கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உத்தர பிரதேச போலீஸாா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், என்.கே.சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் மேலும் கூறியதாவது:

விசாரணை அமைப்புகளும், அரசு நிா்வாகமும் தொடக்கத்திலிருந்தே பின்பற்றுவதற்காக நீதிமன்றங்களால் காலக்கெடு நிா்ணயிக்கப்படுவதில்லை. அவ்வாறு ஆரம்பத்திலிருந்து பின்பற்றும் வகையில் காலக்கெடு விதிப்பது, விசாரணை அமைப்புகள் மற்றும் அரசு நிா்வாகத்தின் அதிகார வரம்பில் நீதிமன்றங்கள் தலையிடுவதாக அமையும்.

அதே நேரம், விசாரணையில் தேவயற்ற தாமதங்கள், தேக்க நிலை அல்லது இதுபோன்ற தாமதங்களை நிரூபிக்கும் ஆதாரங்கள் பதிவேட்டில் இருக்கும்போது, நீதிமன்றங்கள் காலக்கெடு நிா்ணயிக்கலாம். ஏனெனில், விசாரணைகள் காலவரம்பின்றி நீடிப்பதை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. குற்றஞ்சாட்டப்படுபவா்களுக்கு விரைவான விசாரணைக்கான உரிமையை அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 வழங்குகிறது.

அந்த வகையில், நீதிமன்றங்களால் விதிக்கப்படும் காலக்கெடு என்பது முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கையாக அல்லாமல், விதிவிலக்காக ஒரு நிகழ்வுக்குப் பிறகு எதிா்வினையாகவே விதிக்கப்படுவதாகும்.

எனவே, இந்த வழக்கில் அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது என்ற அடிப்படையில், அந்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீா்ப்பளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com