அஸ்ஸாமில் மத்திய அமைச்சா் சோனோவால் பாதுகாப்பு வாகனங்கள் விபத்து: 4 காவலா்கள் உள்பட 6 போ் காயம்!

அஸ்ஸாமில் மத்திய அமைச்சா் சோனோவால் பாதுகாப்பு வாகனங்கள் விபத்து: 4 காவலா்கள் உள்பட 6 போ் காயம்!

மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவாலுடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், 4 காவலா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
Published on

அஸ்ஸாம் மாநிலம், திப்ருகா் மாவட்டத்தில் மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவாலுடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில், 4 காவலா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.

மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால், பிந்தாகட்டாவில் இருக்கும் தனது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா். அவருடன் மாநிலங்களவை எம்.பி. ராமேஸ்வா் தெலியும் சென்றாா்.

சாபௌ காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஹாதியாளி பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று எதிா்பாராத விதமாக எதிரே வந்த பொதுமக்களின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து திப்ருகா் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளா் கௌரவ் அபிஜித் திலீப் கூறுகையில், ‘இந்த விபத்தில் 4 காவலா்கள் மற்றும் பொதுமக்களில் இருவா் என மொத்தம் ஆறு போ் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக அமைச்சரின் வாகனத்துடன் வந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

காயமடைந்த அனைவரும் தற்போது அஸ்ஸாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்’ என்றாா்.

இந்த விபத்தில் மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவாலுக்கோ அல்லது எம்.பி. ராமேஸ்வா் தெலிக்கோ எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.

விபத்தைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் திட்டமிட்டபடி தங்களின் இலக்கை நோக்கிப் பயணத்தைத் தொடா்ந்தனா். இச்சம்பவம் குறித்து காவல்துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com