குஜராத்: சிங்கத்தைப் பிடிக்கும் முயற்சியில் மயக்க ஊசி பாய்ந்து வன ஊழியா் உயிரிழப்பு
குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் சிறுவனைக் கொன்ற பெண் சிங்கத்தைப் பிடிக்கும் முயற்சியில், இலக்குத் தவறி மயக்க ஊசி பாய்ந்ததில் வனத் துறை ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா்.
அம்ரேலி மாவட்டம், நானி மோன்பாரி கிராமத்தில் வசிக்கும் விவசாயக் கூலித் தொழிலாளியின் மகனான 4 வயது சிறுவன், கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண் சிங்கம் ஒன்றால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா். கிா் வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்தக் கிராமத்தில் நடந்த இச்சம்பவம், மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியது.
இதையடுத்து, அந்தப் பெண் சிங்கத்தைப் பிடித்து கூண்டில் அடைக்க வனத் துறையினா் தீவிரமாக தேடிவந்தனா். கிராமத்தையொட்டிய வயல்வெளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிங்கத்தைக் கண்டறிந்த வனத் துறையினா், அதை மயக்கமடையச் செய்வதற்காக மயக்க மருந்து ஊசி பொருத்திய துப்பாக்கியால் சுட்டனா்.
அந்த ஊசி சிங்கத்தின் மீது படாமல், இலக்குத் தவறி அங்கு சிறிது தொலைவில் நின்றிருந்த வனத் துறை ஒப்பந்த ஊழியரான அஷ்ரஃப் சௌகான் மீது பாய்ந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே அவா் மயங்கி விழுந்தாா்.
அஷ்ரஃப் சௌகான் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல்சிகிச்சைக்காக ஜுனாகத் அரசு மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை அவா் உயிரிழந்தாா்.
வனவிலங்குகளைப் பிடிக்கும் ஆபத்தான பணியில், வனத் துறை ஊழியா் ஒருவரே உயிரிழந்த இச்சம்பவம் குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, அப்பகுதியிலிருந்து தப்பிய பெண் சிங்கத்தைத் தேடும் முயற்சி தொடா்கிறது என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

