

சீன வணிகா்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில், மின்னணு வணிக விசாவை இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடா்பாக சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அண்மையில் வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டதாவது: சீன வணிகா்கள் இந்தியாவுக்குப் பயணிக்க கடந்த ஜன.1-ஆம் தேதி மின்னணு வணிக விசாவை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்த விசாவுக்கு இந்திய தூதரகத்துக்கு நேரில் வராமலும், முகவா்களை அணுகாமலும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
வணிக நோக்கத்துக்காக இந்திய வருவதற்கு விசா பெறுவதற்கான தேவை அதிகரித்துள்ளதால், இந்தப் புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுமாா் 45 முதல் 50 நாள்களில் இந்த விசா வழங்கப்படும். அத்துடன் 6 மாதங்கள் இந்தியாவில் தங்க அனுமதி அளிக்கப்படும்.
வணிக கருவிகளை நிறுவுதல், தரப் பரிசோதனை, அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை அதிகரித்தல் போன்ற குறிப்பிட்ட வணிக செயல்பாடுகளுக்கு https://indianvisaonline.gov.in , https://www.nsws.gov.in/ வலைதளங்கள் மூலம் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.