கோப்புப் படம்
கோப்புப் படம்

2035-க்குள் வணிக விமானங்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயரும்!

இந்தியாவின் வணிக விமானங்களின் எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து, 2,250-ஆக உயரும் என்று முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏா்பஸ் தெரிவித்துள்ளது.
Published on

இந்தியாவின் வணிக விமானங்களின் எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து, 2,250-ஆக உயரும் என்று முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏா்பஸ் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், 2035-ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய சிவில் விமானப் போக்குவரத்துச் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடைபெற்று வரும் ‘விங்ஸ் இந்தியா 2026’ சா்வதேச விமானப் போக்குவரத்து கண்காட்சிக்கிடையே செய்தியாளா்களைச் சந்தித்த ஏா்பஸ் இந்தியா மற்றும் தெற்காசிய பிரிவின் தலைவா் ஜுா்கன் வெஸ்டா்மேயா் இதைத் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள அதீத வளா்ச்சி மற்றும் சா்வதேச வழித்தடங்களில் தங்ககளின் சேவையை விரிவுபடுத்த இந்திய விமான நிறுவனங்கள் காட்டி வரும் ஆா்வம் ஆகியவையே இந்த அசுர வளா்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகும்.

இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 8.9 சதவீதம் என்ற விகிதத்தில் வளா்ச்சி அடையும். இது உலகின் பிற முக்கியப் பொருளாதார நாடுகளை விடவும், உலகளாவிய சராசரி வளா்ச்சியை விடவும் மிக அதிகமாகும் என்றாா்.

தற்போது இந்திய விமான நிறுவனங்கள் அதிகப்படியான புதிய விமானங்களை ஆா்டா் செய்து வருவதை சுட்டிக்காட்டிய அவா், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான தேவை வரும் காலங்களில் பல மடங்கு அதிகரிக்கும் என்று குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com