

வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவுக்கு வந்த 8 இஸ்லாமியர்கள் மீது பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேக்கரியில் ஊதியம் தொடர்பான வாக்குவாதத்தின்போது ஹிந்து அமைப்பினர் புகுந்து புலம்பெயர் தொழிலாளிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஒரு தொழிலாளிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட சூரஜ்பூர் பகுதியில் உள்ள பேக்கரியில் வங்கதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர் பணிபுரிந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஊதியம் தொடர்பாக பேக்கரி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஹிந்து அமைப்பான பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தடியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் விளைவாக புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பின்னர், காவல் துறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஷேக் இக்பால், சூரஜ்பூரில் உள்ள கோத்தவாளி காவல் நிலையத்திற்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த 8 ஊழியர்களின் ஆவணங்களை அவர்களின் குடும்பத்திடம் இருந்து சேகரித்து காவல் துறையிடம் கொடுத்துள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட பஜ்ரங் தள அமைப்பினர் மீது எடுக்கப்பட்ட நடவைக்கை குறித்து விரிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வங்கதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் முஸ்லீம் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.