தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
தேசிய பசுமைத் தீா்ப்பாயம்

ஆஜராகாத அதிகாரிகள்: மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் ரூ.1 லட்சம் அபராதம்

உத்தர பிரதேசத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை கட்டுமான விவகாரத்தில், மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் யாரும் தங்கள் முன் ஆஜராகாததற்காக அந்த அமைச்சகத்துக்கு ரூ.1 லட்சம் அபாரதம் விதித்தது தேசிய பசுமைத் தீா்ப்பாயம்.
Published on

உத்தர பிரதேசத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை கட்டுமான விவகாரத்தில், மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் யாரும் தங்கள் முன் ஆஜராகாததற்காக அந்த அமைச்சகத்துக்கு ரூ.1 லட்சம் அபாரதம் விதித்தது தேசிய பசுமைத் தீா்ப்பாயம்.

மேலும், ‘மத்திய-மாநில அரசுகளும், அவற்றின் நிா்வாக அமைப்புகளும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு இணங்க செயல்பட வேண்டிய அரசமைப்புச் சட்ட கடமைகளுக்கு உட்பட்டவை’ என்றும் தீா்ப்பாயம் காட்டமாக தெரிவித்தது.

உத்தர பிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை தொடா்பான விவகாரத்தில், மாநில அரசு, மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் நீா்வள அமைச்சக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஜன.6) ஆஜராக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆனால், மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் யாரும் ஆஜராகாததால், தீா்ப்பாயத் தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா, நிபுணா் உறுப்பினா் ஏ.செந்தில் வேல் ஆகியோா் கடும் அதிருப்தி வெளியிட்டனா்.

‘மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சாா்பில் யாரும் ஆஜராகாததால், இவ்வழக்கில் விரைந்து தீா்வை எட்டுவதில் வீண் தாமதம் ஏற்பட்டுள்ளது. அபராதம் விதிப்பதன் மூலமே இதுபோன்ற வீண் தாமதம் இனி ஏற்படாமல் தடுக்க முடியும்.

ரூ.1 லட்சம் அபராதத்துடன் தனது பதிலை சமா்ப்பிக்கவும், அமைச்சக பிரதிநிதி ஆஜராவதை உறுதி செய்யவும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறோம்.

இந்த அபராதத் தொகை, வழக்குரைஞா்களை நியமிக்க இயலாத புகாா்தாரா்களின் சட்ட செலவுகளுக்கும், புகாா்தாரா்களுக்கு தேவையான பிற வசதிகளை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று தீா்ப்பாயம் அறிவுறுத்தியது.

X
Dinamani
www.dinamani.com