

பாஜக எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் காலில் 73 வயது எம்.எல்.ஏ. தேவேந்திர குமார் ஜெயின் விழுந்து வணங்க முற்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வான தேவேந்திர குமார் ஜெயின் (73) பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாஜக எம்.பி.யும் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவும் கலந்து கொண்டார்.
இந்தக் கொண்டாட்டத்தின்போது, கேக் வெட்டி, தேவேந்திர குமாருக்கு மஹாரியமான் ஊட்டி விட்டார். இதனைத் தொடர்ந்து, 31 வயதேயான மஹாரியமானின் காலில் 73 வயதான தேவேந்திர குமார் விழுந்து வணங்க முயன்றார்.
தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் விடியோவாக சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இருப்பினும், இதுகுறித்து தேவேந்திர குமார் கூறுகையில், "எனக்காக மஹாரியமான் பிறந்தநாள் பாடியதால் நான் உணர்ச்சிவசப்பட்டேன். இதனால்தான், அவரது கால்களைத் தொட முயன்றேன். இது முற்றிலும் கலாசார மற்றும் என்னுடைய தனிப்பட்ட வெளிப்பாடு.
இளம் வயதினரின் கால்களைத் தொடுவது குறித்து அரசியலமைப்பில் எதுவும் எழுதப்படவில்லை. இவர்கள்தான் இதனை வைரலாக்குகின்றனர். அதுபற்றி எனக்குக் கவலையில்லை" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.