

உத்தரப் பிரதேசத்தின் துத்தி சட்டப்பேரவை தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவும், மூத்த பழங்குடியினத் தலைவருமான விஜய் சிங் கோண்ட் உடல்நலக் குறைவால் லக்னௌவில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு வயது 71. விஜய் சிங் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளுக்காக லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரது மறைவு பழங்குடியின சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என சமாஜ்வாதி கட்சியின் துத்தி சட்டப்பேரவைத் தொகுதித் தலைவர் அவத் நாராயண் யாதவ் கூறினார்.
விஜய் சிங் 2024 இடைத்தேர்தலில் துத்தி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980-ல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய விஜய் சிங் கோண்ட், முதன்முதலில் துத்தி தொகுதியிலிருந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 1985-ல் காங்கிரஸிலும், 1989-ல் சுயேச்சையாகவும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1991, 1993-ல் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996, 2002-ல் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் பழங்குடியினத் தலைவராகப் பரவலாகக் கருதப்பட்ட கோண்ட், பழங்குடியின சமூகங்களின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பான பிரச்னைகளைத் தொடர்ந்து எழுப்பி வந்தார்.
விஜய் கோண்டின் உடல் இன்று மாலைக்குள் துத்திக்கு வந்து சேரும் என்றும், இறுதிச் சடங்குகள் துத்தியில் உள்ள கந்தர் ஆற்றங்கரையில் நடைபெற உள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பிற மூத்த தலைவர்கள் விஜய் கோண்டின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.