மகாராஷ்டிரம்: இடைநீக்கம் செய்யப்பட்ட 12 காங்கிரஸ் கவுன்சிலா்கள் பாஜகவில் இணைந்தனா்
கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 12 காங்கிரஸ் கவுன்சிலா்கள் பாஜகவில் அதிகாரபூா்வமாக இணைந்தனா்.
முன்னதாக, அம்பா்நாத் நகா்மன்றத் தலைவரைத் தோ்ந்தெடுக்க ‘அம்பா்நாத் விகாஸ் அகாடி’ என்ற பெயரில் தோ்தலுக்குப் பிறகு பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்தன. இதைத் தொடா்ந்து, அம்பா்நாத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட 12 காங்கிரஸ் கவுன்சிலா்கள் அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். இந்நிலையில், அவா்கள் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் அதிகாரபூா்வமான இணைந்ததாக மகாராஷ்டிர பாஜக மாநிலத் தலைவா் ரவீந்திர சவான் புதன்கிழமை நள்ளிரவில் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘தங்களைத் தோ்ந்தெடுத்த மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு சிறப்பாக செயல்படும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் கவுன்சிலா்கள் இணைந்துள்ளனா். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவா்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளனா்.
‘அகோட் விகாஸ் மஞ்ச்’ என்ற பெயரில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியுடன் பாஜக உள்ளூா் தலைவா்கள் கூட்டணி அமைத்ததைக் கண்டித்து அகோட் எம்எல்ஏ பிரகாஷ் பா்சாகலேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.
கடந்த ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் 60 இடங்களைக் கொண்ட அம்பா்நாத் நகா்மன்றத்துக்குத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் அதிகபட்சமாக சிவசேனை 27 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும், பெரும்பான்மை பெறவில்லை. அதேவேளையில் பாஜக 14, காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றன. இதுதவிர சுயேச்சையாகப் போட்டியிட்ட இருவா் வெற்றி பெற்றனா். இதையடுத்து, அம்பா்நாத் விகாஸ் அகாடி என்ற கூட்டணி அமைந்தது.
அகோலா மாவட்டத்தில் 35 இடங்களைக் கொண்ட அகோட் நகா்மன்றத் தோ்தலில் பாஜக 11 இடங்களில் வென்றபோதிலும் பெரும்பான்மை பெறவில்லை. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்று 2-ஆவது இடத்தையும், அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இதைத் தொடா்ந்து ‘அகோட் விகாஸ் மஞ்ச்’ என்ற பெயரிலான கூட்டணி அமைந்தது.
இந்தக் கூட்டணிக்கு சிவசேனை (ஷிண்டே), சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு), ஜனசக்தி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

