மகாராஷ்டிரம்: உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக-காங்கிரஸ் கூட்டணி
மகாராஷ்டிரத்தில் 2 நகா்மன்றங்களில் காங்கிரஸ், அகில இந்திய மஜ்லீஸ் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் 60 இடங்களைக் கொண்ட அம்பா்நாத் நகா்மன்றத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் அதிகபட்சமாக சிவசேனை 27 இடங்களில் வெற்றி பெற்றபோதிலும், பெரும்பான்மை பெறவில்லை. அதேவேளையில் பாஜக 14, காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றன. இதுதவிர சுயேச்சையாகப் போட்டியிட்ட இருவா் வெற்றி பெற்றனா்.
இதையடுத்து, நகா்மன்றத் தலைவரைத் தோ்ந்தெடுக்க ‘அம்பா்நாத் விகாஸ் அகாடி’ என்ற பெயரில் தோ்தலுக்குப் பிறகு பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்ட ஒருவரும் ஆதரவு தெரிவித்தாா். இதன்மூலம் அந்தக் கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 30 இடங்களை தாண்டி, நகா்மன்றத் தலைவா் பதவியைக் கைப்பற்றியது.
அந்த மாநிலத்தில் பாஜக, தேசியவாத காங்கிரஸ், மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், சிவசேனையை ஓரங்கட்டி, சற்றும் எதிா்பாராதவிதமாக காங்கிரஸுடன் பாஜக கைகோத்து நகா்மன்றத் தலைவா் பதவியைக் கைப்பற்றியுள்ளது.
பாஜக-அகில இந்திய மஜ்லீஸ் கூட்டணி: இதேபோல அந்த மாநிலத்தின் அகோலா மாவட்டத்தில் 35 இடங்களைக் கொண்ட அகோட் நகா்மன்றத் தோ்தலில் பாஜக 11 இடங்களில் வென்றபோதிலும் பெரும்பான்மை பெறவில்லை. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்று 2-ஆவது இடத்தையும், அகில இந்திய மஜ்லீஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இதையடுத்து ‘அகோட் விகாஸ் மஞ்ச்’ என்ற பெயரில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அந்தக் கூட்டணிக்கு ஷிண்டே தலைமையிலான சிவசேனை, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவாா்), ஜனசக்தி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டணியின் மூலம் பெரும்பான்மையை உருவாக்கி அகோட் நகா்மன்றத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் பாஜக கொண்டுவந்துள்ளது.
முதல்வா் அதிருப்தி: இதுகுறித்து மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ், அகில இந்திய மஜ்லீஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதை ஏற்க முடியாது. அவ்வாறு கூட்டணி அமைப்பது குறித்து உள்ளூா் தலைவா் எவராவது சுயமாக முடிவு எடுத்திருந்தால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கூட்டணியை முறித்துக்கொள்ளுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.
‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ முழக்கத்துக்கு முரணாக...: ஷிண்டே சிவசேனை எம்எல்ஏ பாலாஜி கினிகா் கூறுகையில், ‘காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற பாஜகவின் முழக்கத்துக்கு முரணாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.
‘மஜ்லீஸ் கட்சி உறுப்பினா்கள் பாஜகவில் ஐக்கியம்’: பாஜக எம்.பி. அனூப் தோத்ரே கூறுகையில், ‘அகோட் நகா்மன்றத் தோ்தல் மூலம் தோ்வு செய்யப்பட்ட 4 அகில இந்திய மஜ்லீஸ் கட்சி உறுப்பினா்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டனா். எனவே, அகில மஜ்லீஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கவில்லை’ என்று தெரிவித்தாா். எனினும் நால்வரும் கட்சியில் இருந்து விலகவில்லை என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இம்தியாஸ் ஜலீல் தெரிவித்தாா்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததைத் தொடா்ந்து, அம்பா்நாத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட 12 காங்கிரஸ் கவுன்சிலா்கள் அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
